புதுடில்லி:""கடந்த 2004 லோக்சபா தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் தலைவர் சோனியா கோரிக்கை விடுத்திருந்தால், அவரை பிரதமராக நியமிக்க தயாராக இருந்தேன். பல்வேறு கட்சி தலைவர்களிடம் இருந்து, எனக்கு நெருக்கடி வந்தாலும், இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தேன்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2004ல், லோக்சபா தேர்தலில், ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, யார் பிரதமராவார் என்ற பரபரப்பு பேச்சு எழுந்தது. காங்., தலைவர் சோனியா, இத்தாலியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு அந்த பதவியை கொடுக்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இறுதியில், மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றார். சோனியா பிரதமராவதற்கு, அப்போது ஜனாதிபதியாக இருந்த, அப்துல் கலாம் தடையாக இருந்தார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், அப்துல் கலாம், தான் எழுதியுள்ள "டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில், இதுபற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார். இந்த புத்தகம் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.
நெருக்கடி:இந்த புத்தகத்தில், 2004 லோக்சபா தேர்தலுக்கு பின் நடந்த நிகழ்வுகள் குறித்து, அப்துல் கலாம், சில சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேர்தல் முடிவுகள் வெளியாகி, மூன்று நாட்கள் ஆன பின்பும், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. இந்த கால கட்டத்தில், என்ன முடிவு எடுப்பது என்பதில் எனக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளை அழைத்து, தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை (காங்கிரஸ்) ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுக்கும் கடிதத்தை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டேன்.
இந்நிலையில், மே மாதம் 18ம் தேதி, பிற்பகலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, மன்மோகன் சிங்குடன் வந்து, என்னை சந்தித்தார். அரசு அமைப்பது குறித்து ஆலோசித்தார். அப்போது, சோனியா என்னிடம், "ஆட்சி அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை தங்களிடம் இருப்பதாகவும், ஆனால், ஆதரவு கடிதங்களை தற்போது கொண்டு வரவில்லை, அடுத்த நாள் கொண்டு வருவதாகவும்' கூறினார். அதற்கு நான், "இந்த முடிவை ஏன் தள்ளிப் போடுகிறீர்கள். இன்றே இந்த பிரச்னையை முடித்து விடலாமே' என்றேன். இதன்பின், சோனியா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
வலியுறுத்தல்:இதற்கிடையே, பல்வேறு நபர்கள், அமைப்புகள், கட்சிகளிடம் இருந்து எனக்கு ஏராளமான கடிதங்கள், மின்னஞ்சல்கள் வந்தன. சோனியா வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், அவரை பிரதமராக நியமிக்கக் கூடாது என, அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், சட்ட ரீதியாக இதுபோன்ற வேண்டுகோளை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஆட்சி அமைக்க, தனக்கு உரிமை அளிக்கும்படி சோனியா கோரியிருந்தால், கண்டிப்பாக அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியிருப்பேன். அவரை பிரதமர் பதவியில் அமர்த்துவதை தவிர, எனக்கு வேறு வழியில்லை.
ஆச்சர்யம்:அடுத்த நாள் மாலை, சோனியாவும், மன்மோகன் சிங்கும் என்னை சந்தித்தனர். ஆட்சி அமைக்க ஆதரவு அளித்து, கட்சிகள் கொடுத்திருந்த கடிதங்களை சோனியா என்னிடம் கொடுத்தார். நானும் மகிழ்ச்சி தெரிவித்தேன். நீங்கள் விரும்பும் நாளில் பதவியேற்கலாம் என்றேன். அப்போது தான், சோனியா ஒரு தகவலை தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இந்த தகவல் எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை அளித்தது. ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளை அழைத்து, ஏற்கனவே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து தயாரிக்கப்பட்ட கடிதத்தை மாற்றி, மன்மோகன் சிங்கின் பெயரை அதில் இடம் பெறும்படி செய்ய வேண்டும் என, கூறினேன். இதைத் தொடர்ந்து, 22ம் தேதி பதவியேற்பு விழா முடிந்ததும் தான், பெரிய பணி முடிவடைந்த நிம்மதி எனக்கு ஏற்பட்டது.இவ்வாறு புத்தகத்தில், அப்துல் கலாம் எழுதியுள்ளார்.