தர்மபுரி: தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவி்த்துள்ளார்.
தர்மபுரியில் நேற்று தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, மக்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இருவரும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
மேலும் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து குடியரசு தலைவர் தேர்தலை தேமுதிக புறக்கணித்து உள்ளது என்றார்.