லக்னோ:புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள், தன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்ற சம்பவம், உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னார்வ அமைப்பின் மூலம், கழிப்பறை கட்டிய பின்னரே, தன் கணவருடன் வாழ, மணமகள் சம்மதம் தெரிவித்தார்.
உ.பி., மாநிலம், கோரக்பூர் அடுத்த, மகாராஜ் கஞ்ச் விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமர்ஜித். சமீபத்தில், இவருக்கும், பிரியங்கா பாரதி என்பவருக்கும், திருமணம் நடந்தது.
கழிப்பறை எங்கே?:புகுந்த வீட்டிற்கு சென்ற பிரியங்கா, கழிப்பறை எங்கே என்று, தன் கணவரிடம் கேட்டுள்ளார். நாங்கள் எல்லோரும், திறந்த வெளியில் தான் சென்று வருகிறோம்; நம் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றார். அதிர்ச்சியடைந்த பிரியங்கா, தன் கணவரிடம், கழிப்பறையை கட்டிய பின், என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறி விட்டு, அங்கிருந்து, தன் பிறந்த வீட்டிற்கே சென்று விட்டார். இதனால், அமர்ஜித் வீட்டில், எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. பின், இந்த தகவல் எல்லோருக்கும் தெரிய வரவே, அந்தக் கிராமத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, "சுலாப்' என்ற தன்னார்வ அமைப்பு, பிரியங்காவின் வேண்டுகோளை ஏற்று, கழிப்பறையை கட்டித்தர முன்வந்தது.
திறப்பு விழா:சமீபத்தில், இந்தக் கழிப்பறையின் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, அந்தக் கிராமமே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. பிரியங்கா பாரதியைப் போலவே, ஜோதி என்பவரும், கழிப்பறை இல்லாத வீட்டில் குடியிருக்க மாட்டேன் என குரல் எழுப்பியதை அடுத்து, இப்பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.