விருதுநகர்:நேர்மையாகவும், திறமையாகவும் செயல்பட்ட, விருதுநகர் கலெக்டர் பாலாஜி மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.விருதுநகரில் கலெக்டராக இருந்த பாலாஜி, நேர்மையாக நடந்து கொண்டார். பதவி ஏற்ற பின், நகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பாரபட்சமின்றி அகற்றினார். விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டை முழுமையாக செயல்படுத்தினார்.
அரசின் நலத் திட்டங்களுக்கு, பயனாளிகள் தேர்வு நேர்மையாக நடந்தது. தவறு செய்யும் ஊராட்சித் தலைவர்களுக்கு, "செக்' வைத்தார். அதிகாரிகளை வேலை வாங்குவதில், கறாராக இருந்தார். அரசியல்வாதிகளிடம் இணக்கம் காட்டவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணிகளுக்கு, நேர்மையாக ஆட்களை தேர்வு செய்ததால், அரசியல்வாதிகள் கொதிப்படைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கு, பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலர் கண்ணன் கூறுகையில், ""நேர்மையான கலெக்டரை மாற்றம் செய்தது, கண்டிக்கத்தக்கது. இது, தவறான வழிமுறை,'' என்றார்.
நேர்மைக்கு மதிப்பில்லை பணி நியமன தேர்வு ரத்து:விருதுநகரில் சத்துணவு, அங்கன்வாடி பணி நியமன உத்தரவு, நேர்மையாக வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் திடீரென மாற்றப் பட்டதால், தேர்வு பெற்றவர்களை பணியில் சேர விடாமல், அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக, புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில், கலெக்டர் பாலாஜி நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். "எந்த சிபாரிசு வந்தாலும், மனுதாரர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர். அடுத்த பணி நியமனங்களுக்குக் கூட, செல்ல முடியாத நிலை ஏற்படும்' என, சிபாரிசுகளுக்கு தடை விதித்தார். அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல், ஜூன் 23 முதல் 25 வரை, நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.
முடித்த ஓரிரு நாளில், 1,006 பேருக்கு, நியமன உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி, நேர்மையான முறையில், தகுதியானவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இதனால், நியமன உத்தரவு பெற்றவர்களை, பணியில் சேர்க்கக் கூடாது என, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். தற்போது, 20 பேர் மட்டுமே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேர்மையாக நேர்முகத் தேர்வு நடத்திய கலெக்டர், திடீரென மாற்றப்பட்டதால், தேர்வு பெற்றவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.