உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

30 June 2012

தமிழக மக்களை கண்டு கொள்ளாத மத்திய அரசு: விஜயகாந்த் பாய்ச்சல்!


தர்மபுரி: தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவி்த்துள்ளார்.
தர்மபுரியில் நேற்று தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, மக்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இருவரும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
மேலும் மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து குடியரசு தலைவர் தேர்தலை தேமுதிக புறக்கணித்து உள்ளது என்றார்.

பசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி


ஈரோடு: பசுவின் கோமியம் மற்றும் சாணத்திலிருந்து, மருந்துப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில், ஈரோடு மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது.
ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள், மெதுவாக இயற்கை வேளாண்மைக்கு மாறுகின்றனர்.

பஞ்ச கவ்யம் தயாரிப்பு:விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட ஈரோடு மாவட்டத்திலும், ஏராளமான விவசாயிகள், ரசாயன உரத்தை தவிர்த்து, பால், தயிர், மோர், நெய், சாணம், கோமியம் ஆகிய, மாட்டின் பொருட்களை வைத்து "பஞ்ச கவ்யம்' தயாரித்தும், சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றால் "ஜீவாமிர்தம்' தயாரித்தும், பயிர்களுக்கு தெளித்து, நல்ல மகசூல் காண்கின்றனர். நாட்டுப் பசுவை, ஒரு இயற்கை உரத் தொழிற்சாலையாகவே, ஈரோடு விவசாயிகள் கருதுகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, நாட்டுப் பசுவின் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து, பல்வேறு மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். ஈரோடு, சாவடிப்பாளையம், லக்காபுரம், கோபி, குட்டப்பாளையம் உட்பட, ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்களால், கோசாலைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும், 350 முதல், 500 நாட்டுப் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.இவற்றிடம் இருந்து பெறப்படும் கோமியம், சாணம் ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு, காய்ச்சி வடிக்கப்பட்ட கோமியம், குளியல் சோப்பு, விபூதி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஷாம்பு, ஹேர் ஆயில், பினாயில் உட்பட, ஏராளமான பொருட்களை தயாரிக்கின்றனர்.

"அரசு உதவ வேண்டும்':பஞ்ச கவ்யப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னோடி விவசாயிகள், கவுந்தப்பாடி பாலசுப்பிரமணியம், வெப்படை முரளி, முத்தூர் முத்துசாமி, கோபி கணேசன் கூறியதாவது:கோசாலைகள் தவிர, 25க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பஞ்சகவ்யா, அர்க் (கோமியம்), சோப்பு, சாம்பிராணி, விபூதி உள்ளிட்டவற்றைத் தயாரிக்கின்றனர். காய்ச்சி வடித்த கோமியத்தை, நாள்தோறும் இருவேளையும், ஐந்து மி.லி., குடித்தால், சகல நோய்களுக்கும் உடலில் இடமிருக்காது. குறிப்பாக, கேன்சருக்கு சிறப்பான நிவாரணியாக உள்ளது. இதுபோல், ஒவ்வொரு தயாரிப்பும் தனிச் சிறப்பு வாய்ந்தது. இப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சந்தைப்படுத்தவும், அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

லண்டன் ஒலிம்பிக்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அதிரபோகிறது!

இளையராஜாவை தொடர்ந்து ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் அதிர போகிறது. உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது லண்டனை நோக்கி திரும்பி கொண்டு இருக்கிறது. காரணம் 2012 ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற இருக்கிறது. இந்தப்போட்டிக்கான துவக்க விழா ஏற்பாடுகள் அனைத்து பிரம்மாண்ட முறையில் தயாராகி வருகிறது. பிரபல ஹாலிவுட் டைரக்டர் டேனி போயல் துவக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள‌ை செய்து வருகிறார்.

இந்தாண்டு லண்டன் ஒலிம்பிக் துவக்க விழா இந்தியர்களுக்கு, அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு ரொம்பவே விசேஷமானது. காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல் இடம்பெற இருக்கிறது என்பது தான். 1980களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ராம்லட்சுமணன் என்ற படத்தில் இடம்பெற்ற நான்தான் ‌கொப்பண்ணடா என்ற பாடல் லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழா நிகழ்ச்சியில் ஒலிக்க இருக்கிறது. இதுவே மிகப்பெரிய கவுரமாக இருந்த தமிழ்ர்களுக்கு இப்போது இன்னொரு கவுரவமும் சேர்ந்து இருக்கிறது. நமது இசைஞானியின் பாடலோடு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரியும் இந்த ஒலிம்பிக்கில் அதிர‌போவது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது, பாயலுடன் இணைந்து ஒலிம்பிக் துவக்க விழாவில் நான் ஒரு இசையை கொடுக்க போகிறேன். அது எந்தமாதிரியான இசை என்று இப்போது சொல்ல முடியாது. துவக்க விழாவின் போது நீங்களே பாருங்கள் என்று கூறியுள்ளார். இதே டேனி பாயலுடன் இணைந்து தான் ஸ்லம்டாக் மில்லினியர் என்ற படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சர்வதேச நிகழ்ச்சியில், இசை உலகில் இந்தியாவின் இரு துருவ நட்சத்திரங்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஒலிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

லஞ்சப்புகாரில் சிக்கிய லஞ்ச ஒழிப்பு அதிகாரி


சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரியாக இருந்த துக்கையாண்டியை, ஓய்வு பெறும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக இன்று சஸ்பெண்ட் செய்து உள்துறை அலுவலகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து கழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பது, இது தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தவர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி., துக்கையாண்டி. இவர் மீது பல்வேறு ஊழல் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில் அவர் நாளை ஓய்வு பெறும் நாளாகும். இந்நிலையில் இன்று உள்துறை முதன்மை செயலர் ராஜகோபால் துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

மேலும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், இன்று முதல் இவர் சென்னையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும் அதிரடி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

துக்கையாண்டி மற்றும் அவரது மனைவி- மகள் பெயரில் சென்னை நீலாங்கரை அருகே நிலம் வாங்கி குவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

1986 ல் சி.பி.சி.ஐ.டி., ஊழல் தடுப்பு பிரிவிலும் முக்கிய பதவியில் இருந்தவர் துக்கையாண்டி, டான்சி வழக்கு விசாரணையின்போது அவர் அதிகாரியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

DOWNLOAD TNPSC GROUP 4 2012 HALL TICKET

DOWNLOAD TNPSC GROUP 4 2012 HALL TICKET

29 June 2012

மன்மதன் பார்ட்-2 ; சிம்பு ஜோடியாக அனுஷ்கா

மன்மதன் வெற்றியை தொடர்ந்து சிம்பு இயக்க இருக்கும், மன்மதன் பார்ட்-2வில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் திரைக்கதையில், அவர் ஹீரோவாக நடித்த படம் மன்தமன். இப்படத்தில் சிம்பு ஜோடியாக ஜோ‌திகா நடித்து இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. மன்மதன் படத்தின் இறுதிகாட்சியிலேயே, அதன் 2ம் பாகமாக தொடரும் என்பதை சிம்பாலிக்காக சொல்லியிருந்தார் சிம்பு. ஒருபக்கம் தன்னுடைய வேட்டை மன்னன், போடா போடி, வாலு படங்களில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் மன்மதன் 2-க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்பு. இம்முறை படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் டைரக்ஷ்ன் ‌பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார்.

மன்மதன்-2வில் ஜோதிகா ரோலில் யார் நடிப்பார் என்று கோலிவுட்டில் பரவலாக ‌கேள்வி எழுந்த நிலையில், இப்போது அந்தரோலில் அனுஷ்கா நடிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே சிம்புவும்-அனுஷ்காவும் வானம் படத்தில் நடித்து இருந்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.

28 June 2012

எடை குறைப்பில் அஜித்...! தினமும் 5 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி!!

பில்லா-2 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அடுத்த படத்தில் மிக ஸ்லிம்மாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக தினமும் கடுமையான உடற்பயிற்சியில் இறங்கி இருக்கிறார் அஜித். விஷ்ணுவர்த்தன் இயக்க, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

படப்பிடிப்பு கடந்த 18ம்தேதி பெங்களூருவில் தொடங்கியது. இப்படத்தில் ஆர்யாவும் முக்கிய‌ ரோலில் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர். இந்த படத்தில் அஜித்தை மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள். அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் அஜித்தை கேட்டுக் கொண்டாராம் விஷ்ணு. இதனை ஏற்றுக் கொண்ட அஜித், கடந்த ஒரு வாரகாலமாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இத்தகவலை விஷ்ணுவர்தன் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித்தின் உழைப்பை பார்த்து ரொம்ப வியந்து போனதாகவும் அவர் கூறியுள்ளார். 

காமெடி நடிகரின் உருவபொம்மை எரித்து போராட்டம்

திருநெல்வேலி: நெல்லையில் சினிமா படம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வசனங்கள் பேசி நடித்ததாக காமெடி நடிகரின் உருவ பொம்மையினை ஒரு அமைப்பினர் எரித்து போராட்டம் நடத்தினர். சமீபத்தில் வெளியான முரட்டுக்காளை திரைபடத்தில் , பிரபல காமெடி நடிகர் விவேக் , தமிழக மக்கள் முன்னேற்றக்கழக கட்சித்தலைவரை விமர்சித்து பேசியதாக எழுந்த புகாரின் பேரில் இன்று நெல்லையில் தியேட்டர் முன்பு கூடிய மல்லர் மாநாடு அமைப்பைச சேர்ந்த சிலர் காமெடி நடிகரின் உருவபொம்மையினை தீயிட்டு ‌கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக தேர்தல் மன்னன் பத்மராஜன் ஜனாதிபதி' பதவிக்கு போட்டி: இதுவரை, 133 முறை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

மேட்டூர்:ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், வழிமொழிவோருக்கு வழியின்றி தவிக்கிறார்.சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராஜன் (55). பாராளுமன்ற தேர்தல் முதல் உள்ளூர் கூட்டுறவு சங்க தேர்தல் வரை அனைத்து தேர்தலிலும் போட்டியிட பத்மராஜன் மனுதாக்கல் செய்வது வழக்கம். ஜனாதிபதி தேர்தல், லோக்சபா, ராஜ்யசபா தேர்தல், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பீகார் உள்பட பல்வேறு மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட இதுவரை, 133 முறை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இதுவரை மூன்று முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துள்ள பத்மராஜன், முன்மொழிவோர், வழிமொழிவோர் இல்லாததால் தவிக்கிறார்.

27 June 2012

சென்னை : மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 30 பயணிகள் படு காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்ணா மேம்பாலப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரிசியின் விலை உயர போகுது


தமிழகத்தில், அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலை உயர்வை எதிர்பார்த்து விவசாயிகள், நெல் இருப்பு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அடுத்த ஓரிரு மாதங்களில் கிலோ அரிசி, 45 ரூபாய் என்ற அளவிற்கு, விலை உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு, அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை; தென்மேற்கு பருவ மழையும், எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. நெல் நடவு சீசன் துவங்க வேண்டிய தருணத்தில், மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.வழக்கமாக ஜனவரி, பிப்ரவரியில் நெல் அறுவடையின் போது, புதிய அரிசி வரத்து அதிகமாக இருந்தது. விலையும் சற்று குறைந்து, மோட்டா ரக அரிசி (ஐ.ஆர்., 20 போன்ற ரகங்கள்) சில்லரையில், கிலோ, 18 ரூபாய், சன்னக ரக அரிசி (வெள்ளைப் பொன்னி, பொன்னி, கர்நாடகா பொன்னி ரகங்கள்) அதிகபட்சமாக, 35 ரூபாய் வரை விற்றது.

வழக்கத்திற்கு மாறாக...: சீசனுக்கு பிறகு செப்டம்பர், அக்டோபரில் தான் அரிசி விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஜூன் மாதத்திலேயே, விலை அதிகரிக்க துவங்கி விட்டது. தற்போது மோட்டா ரக அரிசி, சில்லரையில் கிலோ, 24 ரூபாய், சன்னக ரக அரிசி அதிகபட்சமாக, 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இதுவும், நிரந்தரமான விலை இல்லை; தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தவிரவும், ரேஷன் அரிசி வினியோகத்தின் முழு அளவுத் தேவைக்கும், மத்திய அரசிடம் தமிழக அரசு அரிசி கேட்டிருக்கிறது. அது விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன?அரிசி வியாபாரிகள் கூறியதாவது:அணைகளில் நீர் இருப்பு இல்லாததும், பருவமழை பெய்ய ஆரம்பிக்காததும், விவசாயிகளிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், நெல் இருப்பு வைக்க துவங்கி விட்டனர்.நெல் அரவை ஆலைகளுக்கு, போதிய நெல் வரத்து இல்லை. மேலும், விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு பதிலாக, கரும்பு உள்ளிட்ட பணப் பயிர்களுக்கு மாறி வருகின்றனர். இருக்கிற சூழ்நிலையை பார்த்தால், அடுத்தாண்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி கொள்முதல் செய்ய மில்களுக்கு ஆர்டர் கொடுத்தால், ஒரு வாரம், 10 நாள் கழித்து தான் கிடைக்கிறது. அதுவும் புதிய விலைக்குதான் கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும் மூட்டைக்கு (75 கிலோ) குறைந்தபட்சம், 200 ரூபாய் வரை அதிகரிக்கிறது. சில்லரையில் விற்கப்படும் போது, கிலோவுக்கு நான்கு ரூபாய் வரை அதிகரிக்கிறது. எனவே, அரிசி விலை தொடர்ந்து அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தவிரவும் கடந்த 30 நாட்களில் , கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலையேற்றம் அதிகரித்திருக்கிறது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து, சன்னக ரக அரிசி வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்குக் காரணம். அதேசமயம், ரேஷன் அரிசி சப்ளை சீராக இருக்கும்போது, ஏனிந்த விலை உயர்வு என்பது புதிராகும்.

இட்லி அரிசி விலையும் உயர்வு: இட்லி (கார்) அரிசி பொதுவாக, சாப்பாட்டு அரிசியை விட விலை குறைவாக இருக்கும். தற்போது சாப்பாட்டு அரிசியை விட, விலை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு துவக்கத்தில் இட்லி அரிசி கிலோ, 18 முதல், 24 ரூபாய் வரை விற்றது. தற்போது படிப்படியாக அதிகரித்து குறைந்தது, 26 முதல், 32 ரூபாய் வரை விற்கிறது.திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் இருந்துதான், இட்லி அரிசி வருகிறது. தட்டுப்பாடு காரணமாக, இந்த மாதத்தில் மட்டும் கிலோவுக்கு நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.

26 June 2012

கோவை சிறையில் கைதிகளிடமிருந்து லேப்டாப், செல்போன்,டிவிடி பிளேயர் மற்றும் கட்டுக்கட்டாக பீடி

கோவை சிறையில் குண்டு வெடிப்பு கைதிகளிடமிருந்து லேப்டாப்,  செல்போன்,டிவிடி பிளேயர் மற்றும் கட்டுக்கட்டாக பீடி உள்ளிட்டவை  கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள்  அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை  பெற்றவர்கள், குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்,தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  சிக்கியவர்கள்,ஆயுள் தண்டனை பெற்றவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

இந்நிலையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கடுமையான சோதனைக்கு  பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும்  உள்ளே கொண்டு செல்ல முடியாத அளவுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும்  செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் கைதிகளிடம் இருந்து அவ்வப்போது செல்போன்கள் பறிமுதல்  செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வந்தன.இதைத் தொடர்ந்து கைதிகள் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில் தூக்கு மேடை அருகே வெளியில்  இருந்து சிறைக்குள் ஒரு மர்ம பார்சல் விழுந்தது.அதனை 10-ம் நம்பர் பிளாக்கில்  அடைக்கப்பட்டிருந்த குண்டு வெடிப்பு கைதிகளான ஹக்கீம், அன்வர், இப்ராகிம்  ஆகியோர் ஓடி வந்து எடுத்துக் கொண்டு தங்களது பிளாக்குக்கு சென்றனர்.

இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து விட்டனர்.இதைத்  தொடர்ந்து அவர்கள் சிறை சூப்பிரண்டு முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸ்  சூப்பிரண்டு அந்த மர்ம பார்சல் பற்றி விசாரிக்க ஒரு போலீஸ் படையை அனுப்பினர்.

அவர்கள் குண்டு வெடிப்பு கைதிகள் இருந்த அறைக்கு சென்றனர்.அவர்களை பார்த்தும்  குண்டு வெடிப்பு கைதிகள் ஆத்திரம் அடைந்தனர்.உள்ளே வந்தால் கொன்று விடுவோம்  என்று கூறி மிரட்டினார்கள்.இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் குண்டு வெடிப்பு கைதிகளிடம்  இருந்த பார்சலை பறித்தனர்.அந்த மர்ம பார்சல் சாக்கு மூட்டைக்குள் பொருட்களை  போட்டு தைக்கப்பட்டிருந்தது.அதனை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார்  பிரித்து பார்த்தனர்.

அதில் ஒரு மினி லேப்-டாப், 26 செல்போன்கள், 351 சி.டி.க்கள், 5 சார்ஜர்கள்,  24 ஹெட்போன்கள்,டேட்டா கேபிள்,மினி டி.வி.டி. பிளேயர்,டார்ச் லைட், மெமரி  கார்டு, பீடி கட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.

இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து ரேஸ்கோர்ஸ் போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதனையடுத்து சிறைக்குள் பார்சல் கடத்திய குண்டு  வெடிப்பு கைதிகள் ஹக்கீம்,அன்வர்,இப்ராகிம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல்,தடை செய்யப்பட்ட பொருட்களை  சிறைக்குள் கடத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டது.

சதிச் செயலுக்கு திட்டமா?

கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போன், சி.டி.க்கள்  மூலம் அவர்கள் ஏதாவது சதி செயலுக்கு திட்டமிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம்  போலீசாருக்கு எழுந்தது. இதைத்தொடர்ந்து அது தொடர்பான விசாரணையில் அவர்கள்  இறங்கினர்.

பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பை ஆபரேட் செய்து பார்க்கப்படுகிறது.சி.டி.க்களும்  போட்டு பார்க்கப்படுகிறது.அதில் ஏதாவது சதித்திட்டம் தொடர்பான தகவல்கள் பதிவு  செய்யப்பட்டு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

குண்டு வெடிப்பு கைதிகளுக்கு வெளியில் இருந்து பார்சலை தூக்கி வீசியது யார்? என்பது  குறித்த விசாரணையும் நடக்கிறது. மேலும் இந்த நேரத்தில்தான் பார்சல் தூக்கி வீசப்படும்  என்ற தகவல் குண்டு வெடிப்பு கைதிகளுக்கு எப்படி தெரியவந்தது? எப்படி அந்த தகவலை  வெளியில் இருந்தவர்கள் தகவல் சொன்னார்கள்? என்பது தெரியவில்லை.

இதுதவிர சிறைக்குள் தூக்குமேடை அருகே அதிக பாதுகாப்பு இருக்காது.அதை  பயன்படுத்திதான் அந்த இடத்தில் பார்சல் தூக்கி வீசப்பட்டுள்ளது.எனவே இந்த  திட்டத்துக்கு அதிகாரிகள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜுலை 1 பில்லா 2 First Look!

தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 'பில்லா 2' படம் ஜுலை 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

அஜீத், பார்வதி ஒமணக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்தினை சக்ரி டோல்டி இயக்கி இருக்கிறார்.

'பில்லா 2' படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பில்லா 2 படம் உலகம் முழுவதும் சுமார் 1200 திரையரங்குகளில் ஜுலை 13ம் தேதி வெளியாகிறது. 

ஜுலை முதல் வாரத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். அதில் 'பில்லா 2' படத்தின் FIRST LOOKஐ வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். ஜுலை 1 அல்லது 2ம் தேதி இந்த விழா இருக்கும்.

அதற்கு பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும். 'பில்லா 2' ஒரே சமயத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் வெளியாகிறது.

ஆந்திராவில் ' டேவிட் பில்லா - THE BEGINNING ' என்ற பெயரில் வெளியாகிறது. மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 'பில்லா 2' படம் அந்தந்த நாட்டு சப் -டைட்டிலுடன் வெளியாகிறது." என்று தெரிவித்து இருக்கிறார்.

ஜூனியர் விகடனுக்கு எதிராக ஜெயலலிதா அவதூறு வழக்கு

வாரம் இருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசின் சார்பில் இந்தப் புகார் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் நகர தலைமை வழக்கறிஞர் இந்தப் புகாரினை பதிவு செய்தார். ஜூனியர் விகடன் இதழின் ஆசிரியர், பதிப்பாளர், அச்சிடுபவர் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அவதூறு வழக்கின்படி, ஜூன் 24ம் தேதியிட்ட இதழில் போயஸ் தோட்டத்தில் ஒரு யாகம் நடத்தப்பட்டதாக முதல்வர் பேரில் அவதூறு பரப்பி செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இது உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது, அதுபோன்று எந்த யாகமோ அல்லது பூஜையோ நடைபெறவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும்

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும் என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ்.

இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். முன்னதாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்து, 7 மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது....
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் 104ல் இருந்து தற்போது 244 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வுக் கூடங்கள் 5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று 7 மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்றது.
வினாத்தாள்களை உதவிக் கருவூலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்புவது, அவற்றை சரியாகப் பிரித்தளிப்பது, அவை பாதுகாப்பாகச் சென்று சேர்வது, பின்னர் வினாத்தாள்கள் முறைப்படி பாதுகாப்பாக திரும்பப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாள்களின் விடைகள் (கீ-ஆன்ஸ்வர்) அன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வோம். யாராவது பணம்பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தருவோம், நாங்கள் உத்தரவாதம் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நபர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை உறுதி.
இந்த முறை கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதற்கு வெளிப்படைத்தன்மை காரணமாக இருக்கலாம். ஆன்லைனில் அப்ளை செய்வது உள்ளிட்ட காரணங்களால் அதிகம் பேர் எழுதுகின்றனர்.
குரூப் 2 தேர்வுக்கு இதுவரை 70 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
வி.ஏ.ஓ தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். அதற்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஓரிரு நாளில் இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடைமுறைகளை ஆலோசித்தோம். ஆனால், லட்சக்கணக்கானோர் எழுதும் போது அதில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளன. அவை பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் துறை ரீதியான பதவி உயர்வு குறித்த தேர்வுகளை ஆன்லைனில் எழுதுவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருடம் மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்றன் தேர்வுகளில் 12 லட்சத்து 50 ஆயிரம் தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வுகளுக்கான அனைத்துப் பணிகளும் நடவடிக்கைகளும் வரும் 2013 ஜனவரிக்குள் முடிந்து விடும்.
இந்தத் தேர்வுகளில் ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் மையத்தில் வீடியோ பதிவு செய்யப்பட்டு அவை அங்குள்ள அதிகாரியின் மூலம் அப்போதே கண்காணிக்கப்படும். மற்ற தேர்வு மையங்களில் வீடியோ பதிவு சேமித்து வைத்து அனுப்பிவைக்கப்படும்... என்றார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ்.

சினிமாவில் யாரும் செய்யாத காரியத்தை செய்த ஷாம்...!

படத்தின் கேரக்டருக்காக ஹீரோக்கள் சிலர் தாடி, நீண்ட தலைமுடி என்று வளர்ப்பார்கள், சிலர் மொட்டை அடிப்பார்கள், உடம்பை ஏத்துவதும் இறக்குவதும் தவிர, சில சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து கூட நடிப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர் ஷாம் ஒருபடி மேலே போய், கட்டையால் கண்ணுக்கு கீழே ஓங்கி அடித்தால் கண்கள் எப்படி வீங்குமோ அவ்வளவு பெரிதாக வீங்க வைத்து நடித்திருக்கிறார்.

12 பி, உள்ளம் கேட்குமே, லேசா லேசா, போன்ற பல்வேறு படங்களில் நடித்த நடிகர் ஷாம் தற்போது நடித்து வரும் புதியபடம் 6. வி.இசட் துரை இயக்கி வரும் இப்படத்தில் ஷாம் ரொம்பவே வித்தியாசமாக, ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். ஆறு கெட் அப், ஆறு மாநிலங்கள், ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஆறு அர்த்தம் கொண்ட சம்பவங்கள் தான் இப்படம்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஷாம் கூறியுள்ளதாவது, இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக 89 கிலோ எடையிலிருந்து, 72கிலோவாக எடையைக் குறைத்தேன். கிட்டத்தட்ட ஒருவருடம் தாடியும் நீண்ட முடியுமாக ஆறு மாநிலங்களில் சுற்றித்திரிந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இதையும் தாண்டி படத்திற்கு இன்னும் எபெக்ட் தேவை என டைரக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதுதான் இயக்குனர் துரையிடம், நான் கண்களை இப்படி வீங்க வைத்து வருகிறேன். அதற்கு ஒரு பத்து நாள் தூங்காமல் இருக்கவேண்டும் என்றேன். அவர், அது முடியுமா? ஆபத்தாச்சே? மற்ற இடமென்றால் பரவாயில்லை.. கண்ணில் போய் ரிஸ்க் எடுக்க வேண்டுமா? வீக்கம் குறையாவிட்டால் வாழ்க்கை பூரா கண்தெரியாமல் போக நேரிடும். தவிர நீ ஒரு நடிகன். நடிகனுக்கு முகம் தான் முக்கியம் . அந்த அழகு இந்த படத்துக்கு பிறகும் வேண்டும். வேண்டாம் ஷாம் ரிஸ்க் என்றார்.

இருந்தாலும் இந்த படத்தில் என் முழு அர்ப்பணிப்பையும் காட்டி இருக்கேன். இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம். அதனால் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். இடையில் ஒருநாள் இயக்குனருக்கு போன் செய்து இன்னும் நான்கு நாட்கள் கழித்து ஷூட்டிங் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்துவிட்டேன். எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக காத்திருக்க நான் போய் இறங்கினேன். என் கண்ணைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி. சில மணி நேரத்துக்கு என் கண்களைப் பார்க்கவே பயந்தார்கள்.

கடவுள் புண்ணியம் மீண்டும் என் கண்கள் பழைய நிலைக்கு ஒரு வாரம் கழித்து திரும்பியது. இல்லையென்றால் நினைத்துப்பார்க்கவே விபரீதமாக இருக்கிறது. இதில் ஒரு துளி மேக் அப் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. சினிமாதான் எனக்கு எல்லாம். அதற்காக ஷாம் எதையும் செய்வான் என்பதை இந்த 6 படம் உலகிற்கு சொல்லும். கேரக்டருக்காக மெனக்கெடும் விஷயத்தில் ரஜினி சார், கமல் சார் இருவருமே என் வழிகாட்டிகள். எந்திரனில் ரஜினி சார் பட்ட கஷ்டங்களைப் பார்த்து பிரமித்தேன். அதே போல, கமல் சார் ஒவ்வொரு படத்திலும் கேரக்டருக்காக எத்தனையோ ரிஸ்குகளை எடுத்தவர். அவர்கள் வழியில் பயணிக்க முயற்சிக்கிறேன் என்றார்.

மேலும் படத்திற்காக தாடியும் மீசையுமாக உடல் மெலிந்து காணப்பட்ட அவரை காண அவர்கள் அம்மாவுக்கும் மனைவிக்கும் தாங்க முடியவில்லை. அம்மா பல நேரம் அழுதே விட்டார்கள் என்பதால் ஆறு மாதம் யாரையும் பார்க்காமல் இருந்துள்ளார் ஷாம். மனைவியையும் அம்மாவையும் பெங்களூருக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் சென்னைக்கும் ஷூட்டிங்குக்கும் நடுவே மாதங்களை ஓட்டியுள்ளார்.

ஷாமின் இவ்வளவு பெரிய ரிஸ்க்கிற்கு முதலில் பாராட்டுகள், அப்படியே அவரது படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

அஜித் படப்பிடிப்பில் ரசிகர்கள் ரகளை: சென்னை திரும்பினர் படக்குழுவினர்!

நடிகர் அஜித், நயன்தாரா படப்பிடிப்பில், ரசிகர்களின் ரகளையால், பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பு, பாதியில் நிறுத்தப்பட்டது. படக்குழுவினர் சென்னை சென்றனர். பில்லா-2 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதில், நடிகர் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஷ்ணுவர்தன் டைரக்ஷன் செய்து வருகிறார். படத்துக்கு, இன்னமும் பெயரிடப்படவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. பெங்களூருவில், பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, கடந்த 18ம் தேதியிலிருந்து, படக்குழுவினர் பெங்களூவில் முகாமிட்டனர். பெங்களூரு கருடா மால் அருகே, ஒரு வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. அஜித், நயன்தாரா வந்த தகவல் பரவியது. இதனால், அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடினர். படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள், ரசிகர்கள் செல்ல முற்பட்டனர். இதனால், செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த இரண்டு கார் கண்ணாடிகளை, ரசிகர்கள் அடித்து நொறுக்கினர். இடம் மாற்றம் படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற போது, அஜித்தின் காருக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதனால், மறு நாள் லொக்கேஷன், பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த சர்ச்சில், படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கும், ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது.

அஜித்தை பார்க்க விடாத போலீசாருடன், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், படப்பிடிப்பு முடிந்த அஜித், காரில் வரும் போது, அவரை பார்க்க வேண்டுமென, அவரது ரசிகர்கள் இருவர், பைக்கில் துரத்தி வந்தனர். ரிங்ரோட்டில் வரும் போது, அஜித்தின் காரை, "ஓவர் டேக் செய்து, அவரை பார்க்க முற்பட்ட ரசிகர்கள், நிலை தடுமாறி, அஜித் கார் முன், பைக்குடன் விழுந்தனர். அஜித் கார், உடனடியாக பிரேக் போட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், கோபமடைந்த அஜித், பெங்களூருவில் படப்பிடிப்பு வேண்டாம். வேறு இடம் பார்த்து கூறுங்கள்; வருகிறேன் என கூறி, சென்னை சென்று விட்டார். இதை தொடர்ந்து, பல நாள் திட்டமிட்டு வந்த படக்குழுவினரும், பெங்களூருவை காலி செய்து விட்டு, சென்னை வந்துவிட்டனர்.

நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன?


கைது செய்வது எப்படி?
     வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமைபெற்று விடுகிறது. இது போன்ற சமயங்களில், அந்த நபரைத் தொடுவதோ, உடம்பைச் சுற்றிப் பிடித்துக் கொள்வதோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒரு நபரைச் சூழ்ந்து கொண்டு நிற்பது மட்டும் கைது செய்யப்பட்டதாக ஆகாது. (குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 46)
கைது செய்வதை எதிர்த்தால் என்ன நடக்கும்?
     கைது செய்வதை நீங்கள் பலவந்தமாகத் தடுத்தால், கைது செய்வதற்குத் தேவையான அனைத்தையும் காவல்துறை அதிகாரி பயன்படுத்தலாம். (பிரிவு – 46) மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால், அந்த நபரின் உயிரையும் பறிக்கலாம். ஆனாலும் கைது செய்வதற்கு வேண்டிய அளவுக்கு மீறி பலாத்காரத்தைப் பயன்படுத்துவதை அவர் நியாயப்படுத்த முடியாது (பிரிவு – 46). எனவே தேவைப்படாத நிலையில் தேவையற்ற கட்டுப்பாடு அல்லது உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துதல், கால் களையும் கைகளையும் கட்டி வைத்தல் போன்றவற்றைச் செய்வதற்கு அனுமதிக்கப் படவில்லை.
நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன?
  • உங்கள் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50).
  • பிடிப்பாணையின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையைப் பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 75).
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்க உரிமை உண்டு. (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் பிரிவு 22)
  • 24 மணி நேரத்திற்குள்ளாக, அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். (அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனம் 22)
  • பிணையில் விடுவிக்கப்படக் கூடியவரா என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 50)
உங்களுக்கு விலங்கிடலாமா?
இந்திய உச்ச நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) தீர்ப்பின்படி, ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்புடையவராகவோ அல்லது தப்பி ஓட முயற்சிப்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பவராகவோ இருந்தாலன்றி, கைது செய்யப்பட்ட நபருக்கு விலங்கிடக் கூடாது. கைது என்பது தண்டனையல்ல. எனவே, தேவைப்படாத நிலையில், தேவையற்ற கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படுவதில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டம்

நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்:  அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.
இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.
இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.
அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.
மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.
ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.
இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.
தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.
அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.
ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

இரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா?

இரண்டாவது மனைவியானவர் சட்டபூர்வமான மனைவியல்ல. கணவரின் சொத்து அவரது சுயசம்பாத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டு என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தால் மட்டுமே சொத்தில் பங்கு கேட்க முடியும். அதே நேரத்தில், இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என்றாலும் அவருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் பங்கு உண்டு.

விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் ?


முதலில் எந்த நீதிமன்றத்தில் வழக்குப்போடப் போகிறீர்கள் எனபதை தீர்மானிக்க வேண்டும். திருமணமான இடம் அல்லது கணவன் மனைவி வாழ்ந்த இடமாக இருக்கலாம். இந்து திருமணச் சட்டம், இந்திய விவாகரத்துச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமண முறிவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் பதிவுசெய்ய, என்ன காரணத்தின் பேரில் விவாகரத்து பதிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து ஆவணங்கள் எவை என்பதைக் கூறலாம்.
ஆனால், பொதுவாக எந்தத் திருமணச் சட்டமாயினும் விவாகரத்துப் பதிவு செய்ய திருமணப் பத்திரிக்கை அல்லது திருமணப் பதிவுச் சான்றிதழ்,  முகவரிக்கான ஆதாரம், விவாகரத்துக்கான காரணங்களை எழுதி தட்டச்சு செய்த மனு ஆகிய ஆவணங்கள் அடிப்படையானவை. இதுதவிர, வழக்கறிஞர் மூலம் கொடுத்த நோட்டீஸ், அதற்கான பதிலறிக்கை, காவல்நிலை புகார், புகார் மனு ரசீது, முதல் தகவலறிக்கை, விவாகரத்து மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு உறுதுணையாக வேறு ஆவணங்கள் எதுவாயினும் தாக்கல் செய்யலாம்.

பெண்களுக்கான சொத்துரிமை.... சட்டம் என்ன சொல்கிறது?


ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.
''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.
பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.
இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.
1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:
முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.
கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.
பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல்  இருந்தாலோ உரிமை கோரலாம்.
ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.
இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில்  உள்ளது.
இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.
இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த  சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்'' 

25 June 2012

பெற்றோரே பிச்சை எடுக்க வைத்த 10 வயது சிறுவன் மீட்பு

 பெற்றோரே பிச்சை எடுக்க வைத்த பத்து வயது சிறுவன் மீட்கப்பட்டு சைல்டு லைன் அமைப்பு மூலம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். நாகர்கோவில் வடசேரி பஸ்ஸ்டாண்டில் பத்து வயது சிறுவன் பிச்சை எடுப்பதை பார்த்த சில பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுவனை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவனின் பெயர் அய்யப்பன் (10) என்பதும், தந்தை பெயர் மணிகண்டன் , வெள்ளமடத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தனக்கு படிக்க ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் பெற்றோரே என்னை பிச்சை எடுக்க அனுப்பியதாகவும் போலீசிடம் சிறுவன் தெரிவித்தான். இதை தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பு மூலம் நெல்லை குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சிறுவனின் பெற்றோர் தலைமறைவாகி விட்டனர்.

ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்

போலீசார் ஒருவரை கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை, பெரும்பாலான போலீஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், சர்ச்சைகளில் சிக்குகின்றனர். தமிழகத்தில், ஒருவரை கைது செய்யும்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளை போலீசார் பின்பற்றுவதில்லை. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்வதில்லை. "நேம் பேட்ஜ்' மட்டுமே அணிந்திருக்கின்றனர். கைது செய்தவுடன், அங்கேயே கைது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வதில்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்திலேயே கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். "விசாரணை' என்ற பெயரில் தங்கள் கஸ்டடியில் வைத்திருக்கும் போலீசார், அதை கடைபிடிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது. 
தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு
தெரிவிக்க வேண்டும். ஆனால், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்று, இந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதில்லை. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.கைதானவரின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும். போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். கைதானவரை 48 மணி 
நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும். கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை போலீசார் பின்பற்றிவருகின்றனர். கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும். பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களை உடன் இருக்க போலீசார் அனுமதிக்கின்றனர்.கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை போலீசார் ஒருபோதும் பின்பற்றுவதே இல்லை. இந்த உத்தரவு அனைத்து ஸ்டேஷன்களிலும் காட்சி பொருளாக மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று போலீசிற்கு தெரிந்தும், தொடர்ந்து உத்தரவுகளை மீறுவதால், சர்ச்சையில் சிக்குகின்றனர்.

அஜித்தின் பில்லா-2 ஜூலை 13-ல் ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அஜித் நடித்த பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில், சக்ரி டோல்ட்டி இயக்கத்தில், ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள படம் பில்லா-2. இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்தது. இது பட குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று கூறியுள்ளார். -krk network-

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு

TNEA 2012 - RANDOM NUMBER CLICK HERE
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் இன்றுவெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். பொறியியல் மற்றும் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்‌கைக்கான ‌விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் மொத்தம் 2 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.இன்று பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்ணை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். 

இதைத்தொடர்ந்து சென்னை கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவக்கலவி இயக்குனரகத்தில் இன்று மருத்துவப்படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. 28,245 மணவர்கள் ரேண்டம் எண்ணில் இடம் பெற்றுள்ளனர். 

இதே போன்று மருத்துவப்படிப்பி்ற்கான ரேங்க் பட்டியலும் வெளியிடப்ப‌ட இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், சென்னை அண்ணா பல்கலை. துணைவேந்தர் மன்னர்ஜவஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் பழனியப்பன் கூறுகையில், தமிழகத்தில் 6 பல்கலை.களில் துணைவேந்தர்கள் நியமிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்

24 June 2012

ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்: டாஸ்மாக் "சரக்கு' விற்பனையில்


தமிழகம் முழுவதும், கடந்த மாதத்தில் மட்டும் 48 லட்சம் பெட்டி மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம், முதல் முறையாக, ஒரு மாத மது விற்பனை 2,000 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. மதுக்கடைகளுடன் இணைந்த 4,730 மதுக்கூடங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (ஹாட்), பீர் மற்றும் ஒயின் வகைகளும் விற்பனைசெய்யப்படுகின்றன.

அதிகரிப்பு:கடந்த முறை அ.தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியை பிடித்த நிலையில், மதுபான விற்பனையானது தனியார் கையில் இருந்தது. இம்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2003ம் ஆண்டு மதுவிற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டது. இதன் மூலம், தனியார் செய்துவந்த தீர்வை செலுத்தப்படாத, மதுபான விற்பனை தடுக்கப்பட்டதுடன், அரசிற்கும் வருவாய் தொடர்ந்து அதிகளவில் கிடைத்து வருகிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு, "டாஸ்மாக்' மூலம் பெறப்படும் நிதியும் பேருதவி புரிந்து வருகிறது. மது அருந்துவதன் தீமைகள், விழிப்புணர்வுமுகாம்கள், பேரணிகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மதுப்பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதே நேரத்தில் மறு புறம், கள்ளச்சாராயம், போலி மது மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது, இதனால், ஆயத்தீர்வை செலுத்தப்படாத மதுவகை விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. அரசுடைமையாக்கப்பட்ட 2003ம் ஆண்டில் மதுவிற்பனையால் அரசிற்கு கிடைத்த வருவாய் 3,639.93 கோடி ரூபாய். இது 2007-08ம் ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து 7,473 கோடி ரூபாயை எட்டியது.

மைல்கல்:இவ்வாறாக ஆண்டு தோறும் சராசரியாக, 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்து வருகிறது. 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 12ஆயிரத்து 498 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் இந்த விற்பனை, 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. 2011-12ம் ஆண்டு விற்பனை, 19 ஆயிரம் கோடியை எட்டியது.இதன் மூலம், ஆண்டுதோறும் சரக்கு விற்பனை, 4,000 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து, புதிய எல்லைகளைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மேமாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும், மதுபான விற்பனையானது ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த மாதம் மட்டும், ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 48 லட்சத்து 300 பெட்டிகளும் (கேஸ்), பீர் வகைகள் 36 லட்சத்து 25 ஆயிரம் பெட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதன் மூலம், ஒரு மாத சரக்கு விற்பனை, முதல் முறையாக 2,025 கோடி ரூபாயை எட்டியுள்ளது.மேலும், இந்த மாதம் இதுவரை, ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 38 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள் 25 லட்சம் பெட்டிகளும் விற்பனையாகி, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளது. சமீபத்தில், மதுபான வகைகளின் விலை கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, தற்போதைய கோடை வெப்பத்தின் விளைவாக பீர் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் விற்பனையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

காரணம்:மதுபான விற்பனையின் அளவு உயர்வு குறித்து அதிகாரி, மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது,"" மதுபான விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு எந்த பிரசார திட்டத்தையும் மேற்கொள்வதில்லை. கள்ளச்சாராயம் எவ்வளவு வேகமாக அழிக்கப்படுகிறதோ, அவ்வளவு வேகமாக மது விற்பனை அதிகரிக்கிறது. தற்போது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த அளவுக்கு மது விற்பனை கூடியிருக்கிறது,'' என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT