சென்னை: ""தீராத பிரச்னைகள் பல இருந்தும், அவற்றை தீர்க்க, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காத நிலையில், யார் ஜனாதிபதியாக வந்தாலும், தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. இத்தேர்தலில், கலந்துகொள்ளாமல் இருப்பதே, தமிழகத்திற்கு செய்யும் நன்மையாகும்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: காவிரியாற்றில் தண்ணீர் திறந்துவிட, கர்நாடகா மறுப்பது, 40 ஆண்டுகளாக தொடர்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை, 20 ஆண்டுகளுக்கு மேலாக தீரவில்லை. அட்டப்பாடியிலும் அணை கட்ட, கேரளா முயற்சிக்கிறது. நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரிக்கு தண்ணீர் திறந்துவிட, கேரள அரசு மறுக்கிறது. பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிப்பதையும், தடுக்க முடியவில்லை. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்ப்பதற்குத் தான், மத்திய அரசு இருக்கிறது. ஆனால், தமிழக மக்களை பாதிக்கும் இப்பிரச்னைகளை, மத்திய அரசு இதுவரை தீர்க்கவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களும், நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. சீனர்கள் ஆட்சி நடத்தும் சிங்கப்பூரில் கூட, ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. ஆனால், இந்தியாவில் ஆட்சி மொழியாக, தமிழ் இன்னும் இடம் பெறவில்லை. தமிழகமும், தமிழர்களும், தமிழும் கடந்த காலங்களில், மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டதோடு மட்டுமல்ல, அவர்கள் தங்களது வாழ்வையும், உரிமைகளையும் இழந்து வருகின்றனர். தமிழகத்தில், தீராத பிரச்னைகள் பல இருந்தும், அவற்றை தீர்க்க, எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், யார் ஜனாதிபதியாக வந்தாலும், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலில், கலந்துகொள்ளாமல் இருப்பதே, தமிழகத்திற்கு செய்யும் நன்மையாகும். ஆகவே, எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க, தே.மு.தி.க., தீர்மானித்துள்ளது. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.