"சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்கும் தி.மு.க., வினர் சொந்த ஜாமினில் வெளியே வராமல், அரசு விடுதலை செய்யும் வரை சிறையில் இருந்து, தியாக மனப்பான்மையோடு செயல்படும் கட்சியினருக்குத் தான், மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் பதவிகள் வழங்கப்படும். எனவே, கட்சித் தலைமை அறிவிக்கும் முடிவுக்கு அனைவரும் தயாராகுங்கள்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., பிரமுகர்கள் கைது படலத்தை கண்டிக்கும் வகையில், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, எந்த வகையான போராட்டத்தை நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க, தி.மு.க.,வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
அழைப்பு: கூட்டத்திற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசும் போது, "அ.தி.மு.க., அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி விடவேண்டும்; அழித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. மூத்த மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது, குண்டர் சட்டம் ஏவி விடப்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எந்த வகையான போராட்டங்கள் நடத்த வேண்டும் என்பதை, உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்' என கூறிவிட்டு, செயற்குழுவில் மாவட்டச் செயலர்களை பேசுவதற்கு அழைப்பு விடுத்தார்.
செயலிழப்பு: மாவட்டச் செயலர்கள் பேசியதாவது: "பொய் வழக்குகளை சுமத்தி, பழி வாங்கும் செயலில் அ.தி.மு.க., அரசு ஈடுபடுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினரை கைது செய்யும் படலத்தை தி.மு.க., அரசு நடத்தவில்லை. ஆனால், அ.தி.மு.க., அரசு, தற்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து விட்டது. பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களை மறக்க வைக்கும் வகையில், தி.மு.க.,வினர் மீது வழக்கு தொடுத்து, சிறையில் அடைத்து வருகின்றனர். லோக்சபா தேர்தலில், தி.மு.க., வினரை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பது அ.தி.மு.க.,வின் திட்டமாக உள்ளது. இத்திட்டத்தை முறியடிக்க, கட்சித் தலைமை எடுக்கும் எந்த போராட்டங்களையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.' என அவர்கள் கூறினர்.
ஜாமினில் வரக்கூடாது: ஸ்டாலின் பேசியதாவது: "அராஜக முறையில், தி.மு.க.,வினரை சங்கிலித் தொடராக கைது செய்து வருகின்றனர்; வேண்டுமென்றே பொய் வழக்குகளையும் தொடுக்கின்றனர். திட்டமிட்டு தி.மு.க.,வினர் பழி வாங்கப்படுகின்றனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தனர்? முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மட்டுமல்லாமல், சாதாரண தொண்டர்கள் மீதும் வழக்குகள் பாய்கின்றன. அ.தி.மு.க., போஸ்டரை கிழித்தனர் எனக் கூறி, கைது செய்யும் கொடுமை நடக்கிறது. இந்த அராஜகச் செயலைக் கண்டித்து, மாவட்ட ரீதியாக, கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை செல்ல தயாராக வேண்டும். நெஞ்சுறுதி உள்ள தொண்டர்கள் யார் யார்? என்ற பட்டியலை, மாவட்டச் செயலர்கள் எடுக்க வேண்டும். காலையில் கைதாகி மாலையில் விடுதலை ஆகிவிடலாம் என, யாரும் கருதக்கூடாது. எதையும் சந்திக்க கட்சியினர் தயாராக வேண்டும். கட்சியினரை சிறைக்கு அழைத்துச் சென்றால், அதை முகமலர்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் சொந்த ஜாமினில் வெளியே வரக்கூடாது. கட்சியினரை அரசே விடுதலை செய்யும் அளவிற்கு நீங்கள் உள்ளே இருக்கும் உறுதியை ஏற்க வேண்டும். சிறைக்கு செல்லும் கட்சியினருக்குத் தான் இனிமேல் கிளை, பேரூர், ஒன்றிய, நகர, மாவட்ட அளவில் பதவிகள் வழங்கப்படும்.' இவ்வாறு அவர் பேசினார்.
நிறுத்த வேண்டும்: ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பேசும் போது, "கட்சி தலைமை அறிவிக்கிற எந்த முடிவாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்று, செயல்படுத்த தயாராக இருக்கிறோம். உறுதியான, இறுதியான போராட்டமாக இருக்க வேண்டும். தலைமை அறிவிக்கிற முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். கட்சி நடத்துகிற போராட்டத்தை கண்டு, பொய் வழக்கு போடுவதை அ.தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
அழகிரி, குஷ்பு "மிஸ்சிங்': காலை 10 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், மதியம் 1.30 மணி வரை நீடித்தது. மாவட்டச் செயலர்கள் அனைவரும் பேச வேண்டும் என்பதால், கூட்டம், மாலை 3.30 மணிக்கு, மீண்டும் துவங்கியது. கூட்டத்தில் பேசிய அனைவரும், "போராட்டம் அறிவிக்க வேண்டும்' என்ற ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பங்கேற்கவில்லை. ஸ்டாலின் தனது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் கறுப்பு கண்ணாடி அணிந்துக் கொண்டு வந்தார். அவர் பத்து நிமிடங்களில், தனது பேச்சை முடித்து விட்டு, பாதியில் கூட்டத்தை விட்டு வெளியேறி, வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.