உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

26 June 2012

தகவல் அறியும் உரிமை சட்டம்

நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது. மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்:  அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.
இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.
இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.
அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.
மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.
ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.
இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.
தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.
அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.
ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT