லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம்பெற இருப்பதாக இங்கிலாந்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில், உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அடங்கிய நிகழ்ச்சியும் ஒன்று. இதில் இடம்பெற்றுள்ள 86 பாடல்களில், தமிழ்த்திரைப்பட பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களின் பெரும்பாலான பாடல்கள் இடம்பெறும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ராம் லஷ்மண் படத்தில் எஸ்.பி., பாலசுப்ரமணியம் பாடிய “நான் தான் ஒங்கப்பண்டா” என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள இங்கிலாந்து இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிரபல இங்கிலாந்து இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷதுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்த பாடலின் இசையும், ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடும் என இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி இடம்பெற்றுள்ளது. இது குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தை இயக்கிய டானி போயல் அவர்கள் ஒலிம்பிக் துவக்கவிழா நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறார். அவரது மேற்பார்வையில், சுமார் 27 மில்லியன் பவுண்ட் செலவில் உருவாகி வரும் இந்த துவக்கவிழா நிகழ்ச்சியில், உலக அளவில் பல லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்க இருக்கும் ஒலிம்பிக் துவக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை இடம்பெற போவது என்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். -KRK NETWORK-