சென்னை: ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வின் வேட்பாளர் சங்மாவுக்கு, தே.மு.தி.க.,வின் ஆதரவை கேட்போம் என, அக்கட்சியின் தேசிய செயலர் நிர்மலா சீத்தாராமன் கூறினார். இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி: ""பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான சங்மாவை, பா.ஜ.,வின் வேட்பாளராக அறிவித்துள்ளோம். ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவை மாநிலக் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அவரை தேசிய கட்சியான பா.ஜ., ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போதுள்ள அரசியல் சூழல்களை கவனத்தில் கொண்டு தான் சங்மாவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளோம். சங்மாவை ஆதரிப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாறுபட்ட நிலைகள் நிலவுவதால் கூட்டணிக்கு பாதிப்பில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., நிறுத்திய வேட்பாளரை ஆதரிக்காமல், பிரதிபா பாட்டிலை சிவசேனா ஆதரித்தது. இப்போது அதேபோல் எங்கள் வேட்பாளரை ஆதரிக்காமல், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், அவர்களுடைய முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்போம். சங்மாவுக்கான பிரசார குழு நாளை முதல் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆதரவை திரட்டும். தமிழகத்தில் தே.மு.தி.க.,வின் ஆதரவையும் கேட்போம்.'' என்று தெரிவித்தார்.