"ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார்.
அவர் கரூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சில காரணங்களை அவர் கூறியுள்ளார். ஆனால், முல்லை பெரியாறு பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக அளித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழ் மக்களின் உணர்வை மதித்து, ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஓட்டளித்தது. தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே, அது கட்சியின் முடிவாக இருந்தாலும், அதை விஜயகாந்த் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
கேரளா ஆளுங்கட்சியினர், தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகின்றனர். சிறுவாணி ஆற்றின் நடுவே அணை கட்ட கேரளா முயற்சிக்கிறது. அணை கட்டினால், கோவை, ஈரோடு மாவட்டங்கள் பாதிக்கும்.கோவைக்கு சிறுவாணி தான் ஜீவாதாரம். கோவையில் மட்டும், 27 சதவீதம் கேரளா மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் தான் பாதுகாப்பு வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். -KRK NETWORK-