உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

23 June 2012

நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்


பெங்களூரு: ""நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய பல அதிரடி தகவல்களை, ஆர்த்திராவ் விரைவில் வெளியிடுவார்,'' என, அவரின் தந்தை சேதுமாதவராவ் கூறினார். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, ஸ்வர்ணா கன்னட "டிவி' சேனல் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், ஆர்த்திராவ். நேற்று, அவரின் தந்தை சேதுமாதவராவ், பெங்களூரு பிரஸ் கிளப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:

தீவிர பக்தை: நித்யானந்தா, 2004ல் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியபோது, நான், என் மனைவி, மகள் ஆர்த்தி மூவரும் கலந்து கொண்டோம். அப்போது, எங்கள் குடும்பத்தை பற்றி விசாரித்தார். பிடதி ஆஸ்ரமத்தில் நடக்கும், "எனர்ஜி தரிசனம்' நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினார். நாங்கள் மூவரும் ஆஸ்ரமம் சென்றோம். அவரது வழிபாடுகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவ்வப்போது, ஆஸ்ரமத்தில் நடக்கும் வகுப்புகளுக்கு சென்று வந்தோம். ஒரு முறை, "இங்கேயே தங்கிவிடுங்கள்' என, நித்யானந்தா கூறினார். நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், 2005 பிப்ரவரி முதல் 2006 ஏப்ரல் வரை, ஆஸ்ரமத்திலிருந்து நித்யானந்தாவுக்கு சேவை செய்தேன். பின், எனது பணிகள் காரணமாக, ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். ஆனால், என் மகள் ஆர்த்திராவ், நித்யானந்தாவின் தீவிர பக்தையாக மாறி விட்டார்.

மன வேதனை: அவர், நித்யானந்தாவின் பப்ளிகேஷன் நிர்வாகத்தை பார்த்து வந்தார். சில காலம் கழித்து, நித்யானந்தாவின் தனி செயலராக செயல்பட்டார். ஆஸ்ரமத்தில் நிரந்தரமாக தங்காமல், அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது வந்து, சென்று கொண்டிருந்தார். என் வீட்டில், நித்யானந்தா படத்தை வைத்து பூஜை செய்து வந்தேன். 2010ல் நித்யானந்தாவுடன் நடிகை இருப்பது போன்ற சி.டி., வெளியானபோது, நான் மன வேதனை அடைந்தேன். என்னிடம் பலரும் போன் செய்து கேட்டனர். இந்து மதத்தை இழிவுப்படுத்துவதற்காக மாற்று மதத்தினர் பொய் பிரசாரம் செய்கின்றனர் என கூறினேன். ஒரு முறை அமெரிக்கா சென்றபோது, என் மகள் ஆர்த்தியிடம் கேட்டபோது, அவர் சொன்ன வார்த்தைகள், இடி போல் விழுந்தது. "நித்யானந்தா செய்த தவறுக்கு, நானே சாட்சியாக இருக்கிறேன்' என கண்ணீருடன் கூறினார்.

உண்மை தெரிந்தது: குரு போன்று நினைத்தவர், இழிவான செயலில் ஈடுபட்டுள்ளாரே என, நினைக்கும் போதும், இப்படிப்பட்டவருக்கு பலமுறை பாத பூஜை செய்ததை எண்ணும் போதும், மனம் வேதனை அடைகிறது. "ரஞ்சிதாவுடன் சி.டி.,யில் இருப்பது, நான் இல்லை' எனக் கூறி வந்த நித்யானந்தா, சி.டி., வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், சி.டி,யை வெளியிடாமல் இருக்க மீடியா, பத்திரிகை 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக புகார் கூறுகிறார். ஆரம்பத்திலேயே, சி.ஐ.டி., போலீசாரிடம் கூறவில்லையே.

ஆஸ்ரமத்திற்கு நஷ்டம்: நித்யானந்தா மீது, 2010ல் ஆர்த்தி புகார் கூறியுள்ளார். ஆர்த்தி புகார் கூறியதால், அமெரிக்காவில் நித்யானந்தா தரப்பில் புகார் செய்யப்பட்டது. புகாரில், ஆஸ்ரமத்தில் யோகா, தியானத்தை படித்துக் கொண்டு, வெளியே தனியாக வகுப்பு நடத்துவதால், ஆஸ்ரமத்துக்கு, 10 மில்லியன் டாலர் (55 கோடி ரூபாய்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.

வர முடியவில்லை: சென்னையில், எங்கள் மீது பொய் புகார் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனால், ஆர்த்தி வெளியில் வர முடியவில்லை. வழக்கறிஞர் ஆலோசனையின்படி, பாதுகாப்பான இடத்தில் உள்ளார். விரைவில் ஆர்த்தி வெளியே வந்து, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளிப்படுத்துவார். ஆர்த்திக்கு, ஹெச்.ஐ.வி., போல் எச்சில் மூலம் பரவும் வியாதி உள்ளது என, நித்யானந்தா கூறுவது பொய். அவர், மருத்துவப் பரிசோதனைக்கு தயாராக உள்ளார். குழந்தை பருவத்தில் உள்ளேன். ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல என, நித்யானந்தா கூறினார். ஆனால், சி.ஐ.டி., போலீசார், 2010 முதல் ஏழு முறை நோட்டீஸ் கொடுத்தும், மருத்துவப் பரிசோதனைக்கு வரவில்லை. அமெரிக்காவில் ஆர்த்தி மீது தொடர்ந்த வழக்குக்காக, இதுவரை, 16 ஆயிரம் டாலர் (30 லட்ச ரூபாய் ) செலவு செய்து விட்டார்.

கோபிகா எங்கே? நித்யானந்தாவின் தனி செயலராக இருந்த நித்யகோபிகா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்குள்ளார் என விவரம் தெரியவில்லை. வழக்கு விசாரணைக்கு அவர் தேவை என, போலீசார் கூறுகின்றனர். அவர் உயிருடன் உள்ளாரா என்றே தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளியே கொண்டு வர முடிவு செய்தார். அவரை போல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப சூழ்நிலை கருதி, அவர்கள் வெளியே வருவதில்லை. ஆஸ்ரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆஸ்ரமத்தில் இருந்தபோது, லாரிகளில் சாமி சிலைகள் வந்து இறங்குவதை பார்த்துள்ளேன். இவ்வாறு சேதுமாதவராவ் கூறினார்.

நித்யானந்தாவுக்கு எதிராக தர்ம யுத்தம்: "நித்யானந்தாவுக்கு எதிராக, தர்ம யுத்தம் நடத்தி வருகிறேன். அனைவரும் கிருஷ்ணர் போல் உதவ வேண்டும்' என, ஆர்த்திராவ் தந்தை வெளியிட்ட சி.டி.,யில், ஆர்த்திராவ் உருக்கமாக பேசியுள்ளார்.

பெங்களூருவில், ஆர்த்திராவ் தந்தை, நேற்று சி.டி., ஒன்றை வெளியிட்டார். அதில், ஆர்த்திராவ் பேசியுள்ளதாவது: என் மீது, நித்யானந்தா சீடர்கள், ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், தலைமறைவாக உள்ளேன். உங்களை (நிருபர்களை) நேரில் கண்டு பேச முடியாததற்கு, என்னை மன்னிக்க வேண்டுகிறேன். போலி சாமியார் நித்யானந்தாவால், என் வாழ்க்கை சீரழிந்தது. இது போல், வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான், நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். என் வழக்கறிஞர்கள் அறிவுரைப்படி, முன்ஜாமினுக்கு மனு செய்துள்ளேன். குற்றப் பத்திரிகையில் நான் கூறியுள்ள புகார் அனைத்தும் உண்மை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போது, இதை நிரூபிப்பேன். நித்யானந்தா தன்னை கால பைரவர், ரட்சகர், என்று கூறிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறார். எனக்கு, ஹெச்.ஐ.வி., உள்ளதாகவும், ஹெச்.ஐ.வி., சிகிச்சைக்காக, பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும், என் மீது குற்றம் கூறியுள்ளார். ஆன்மிக சேவைக்காக, ஆசிரமம் சென்றேன். ஜெயேந்திரரே அவரை கண்டித்துள்ளார். 2010ல், போலீசாரிடம் நித்யானந்தாவுக்கு எதிராக புகார் அளித்தேன். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அறிந்த நித்யானந்தா, அமெரிக்காவிலிருந்த என் மீது, அவரது சீடர்களை வைத்து, குற்றம் சாட்டி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கிடைத்தவுடன், உங்கள் முன் வருவேன். எனது புகாரை ஏற்றுக்கொண்டு, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த, முதல்வர் சதானந்தா கவுடா, பா.ஜ., அரசு, ரிஷிகுமார் சுவாமிகள், பத்திரிகையாளர்கள், டி.வி., சேனல்கள், கன்னட அமைப்பாளர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் பேசியிருந்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT