புதுடில்லி: ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு கிடைத்துள்ளது. "லண்டன் ஒலிம்பிக்கில் பயஸ்-விஷ்ணு வர்தன், பூபதி-போபண்ணா என, இரண்டு ஜோடி பங்கேற்கும்,' என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) முடிவு செய்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வு, இம்முறை பிரச்னையாக போனது. லியாண்டர் பயசுடன் இணைந்து மகேஷ் பூபதி விளையாடுவார் என, ஏ.ஐ.டி.ஏ., முதலில் அறிவித்தது. இதை ஏற்க முடியாது என, பூபதி முதலில் அறிவித்தார்.
"பூபதி வேண்டாம் என்றால் ரோகன் போபண்ணாவுடன் விளையாடத் தயார்,' என பயஸ் தெரிவிக்க, போபண்ணாவும் மறுத்தார். பின், மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகனை தலையிடுமாறு கேட்டுக்கொண்டார் பூபதி. "வீரர்கள் தேர்வு விஷயத்தில் தலையிட முடியாது,' என, அஜய் மேகனும் ஒதுங்கினார்.
"தரவரிசையில் பின்தங்கிய விஷ்ணு வர்தன், யூகி பாம்ப்ரி போன்ற ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது. தொடர்ந்து வற்புறுத்தினால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன்,' என, தன் பங்கிற்கு திடீரென மிரட்டினார் பயஸ்.
நேற்று டென்னிஸ் வீரர்களை தேர்வு செய்ய கடைசி நாள். பூபதி, போபண்ணாவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. வேறு வழியின்றி இரண்டு ஜோடி செல்லலாம் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.ஏ., தலைவர் அனில் கண்ணா கூறியது:
அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பின், வேறு வழியின்றி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இரு ஜோடிகளை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதன் படி பயஸ்-விஷ்ணு வர்தன் (207வது இடம்), பூபதி-போபண்ணா என இரு ஜோடி ஒலிம்பிக் செல்கிறது. சோம்தேவ் தேவ்வர்மன் தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.
மதிப்பு உள்ளது:
பயஸ் மீது நாங்கள் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க மாட்டோம். பூபதி, போபண்ணா பேசியதை, பயஸ் மன்னித்து விட வேண்டும். இவர், தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். தவிர, முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள போபண்ணா, விஷ்ணு வர்தனின் வெற்றிக்கு உதவுமாறும் கேட்டுள்ளோம்.
நம்பிக்கை உள்ளது:
இந்தியாவின் "நம்பர்-1' வீரர் பயஸ். இந்தியாவுக்காக டேவிஸ் கோப்பை போட்டிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்றுள்ள இவருக்கு, இது ஏற்றுக் கொள்ள முடியாத முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், பயஸ் ஏமாற்றம் அடைய மாட்டார் என்று உறுதியாக நம்புகிறோம்.
அதேநேரம், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பூபதியுடன் சேர்ந்து விளையாடிய சானியா மிர்சாவுக்கு, ஒலிம்பிக்கில் பங்கேற்க சிறப்பு அனுமதி ("வைல்டு கார்டு') கிடைத்தால், கலப்பு இரட்டையரில் பயசுடன் தான் பங்கேற்பார். இதில் மாற்றமில்லை.
இவ்வாறு அனில் கண்ணா தெரிவித்தார்.
பாம்ப்ரி பாய்ச்சல்
ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது என்ற லியாண்டர் பயஸ் முடிவு குறித்து இந்திய இளம் வீரர் யூகி பாம்ப்ரி கூறுகையில்,""1992ல் பயஸ் வயது 19. அப்போதைய சீனியர் வீரர் ரமேஷ் கிருஷ்ணன், பயசை சேர்த்துக் கொண்டு தான், பார்சிலோனா ஒலிம்பிக் இரட்டையர் போட்டியில் பங்கேற்றார். அப்படியென்றால் ரமேஷ் கிருஷ்ணன் செய்தது தவறா. இப்போது பயஸ் இப்படி கூறுவது துரதிர்ஷ்டவசமானது,'' என்றார்.
வரவேற்பும், எதிர்ப்பும்
வேஸ் பயஸ் ( லியாண்டர் பயஸ் தந்தை)
ஏ.ஐ.டி.ஏ., முடிவு பயசுக்கு ஏமாற்றமாக இருக்கும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடிய பயஸ், அடுத்து என்ன செய்வார் என, கணிப்பது கடினம். நாட்டுக்காக விளையாடுவதில் பயஸ் எப்போதுமே சமரசம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இருவரது மிரட்டல் காரணமாக இம்முடிவை எடுத்திருப்பது, மற்றவர்களுக்கும் மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும்.
கிருஷ்ணா பூபதி (மகேஷ் பூபதியின் தந்தை)
இரண்டு அணி செல்வது என்ற ஏ.ஐ.டி.ஏ., முடிவால் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பூபதி, போபண்ணா ஜோடி எப்படியும் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும். அதேநேரம், கலப்பு இரட்டையரில் பயசுடன், சானியா ஜோடி சேர்வார் என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் தருகிறது.
"கிருஷ்ணா, கிருஷ்ணா'
ஏ.ஐ.டி.ஏ., பொதுச்செயலர் பரத் ஓஜா கூறுகையில்,"" நேற்று காலை மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பயசுடன் பேசினார். நாட்டுக்காக சில தியாகத்தை செய்யும் படி அவரிடம் கேட்டுக்கொண்டார். இவரது தலையீட்டுக்குப் பின் தான் இம்முடிவு எடுத்தோம். இதை பயஸ் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்,'' என்றார்.
உற்சாகமாக உள்ளது
பூபதி-போபண்ணா ஜோடி இணைந்து வெளியிட்ட அறிக்கை:
கடந்த நான்கு ஒலிம்பிக்கில் பயசுடன் சேர்ந்து விளையாடியும், பதக்கம் வெல்ல முடியவில்லை. புதிதாக ஜோடி சேர்ந்தால் ஒருவேளை சாதிக்கலாம் என்று தான் போபண்ணாவுடன் இணைந்தேன். எங்களது முடிவில் உறுதியாக இருந்தோம். கடைசியில், 30வது ஒலிம்பிக் போட்டியில் எங்களையும் ஒரு ஜோடியாக தேர்வு செய்தது மகிழ்ச்சி. இனி, எங்களது கவனம் முழுவதும் பயிற்சியில் தான் இருக்கும். கலப்பு இரட்டையரில் சானியாவுடன் பயஸ் விளையாடுவார் என்ற அறிவிப்பு குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
லியாண்டர் பயஸ் விலகல்
இரண்டு ஜோடி முடிவுக்கு பயஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஐ.டி.ஏ., க்கு எழுதிய கடிதத்தில்," ஜூனியர் வீரருடன் தான் பங்கேற்க வேண்டும் என்ற முடிவு ஏமாற்றம் தருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது,' என, பயஸ் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.