சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரியாக இருந்த துக்கையாண்டியை, ஓய்வு பெறும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக இன்று சஸ்பெண்ட் செய்து உள்துறை அலுவலகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து கழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பது, இது தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தவர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி., துக்கையாண்டி. இவர் மீது பல்வேறு ஊழல் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் அவர் நாளை ஓய்வு பெறும் நாளாகும். இந்நிலையில் இன்று உள்துறை முதன்மை செயலர் ராஜகோபால் துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், இன்று முதல் இவர் சென்னையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும் அதிரடி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துக்கையாண்டி மற்றும் அவரது மனைவி- மகள் பெயரில் சென்னை நீலாங்கரை அருகே நிலம் வாங்கி குவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
1986 ல் சி.பி.சி.ஐ.டி., ஊழல் தடுப்பு பிரிவிலும் முக்கிய பதவியில் இருந்தவர் துக்கையாண்டி, டான்சி வழக்கு விசாரணையின்போது அவர் அதிகாரியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.