புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யாரை ஆதரிப்பது, யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நாடு முழுவதும் பாமரன் முதல், உயர் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவரும் ஆளுக்கொரு கருத்தை சொல்லி விவாதித்து வருகின்றனர். இந்தவகையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தங்களின் கொள்கைக்கு எதிராகவும், சிலர் நேர்மறையாகவும், இவர்கள் இப்படிச்சொல்வார்களா என்று வியக்கும் அளவிற்கு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதி பதவியில் அமர்த்தி அழகுபார்க்க பா.ஜ., விரும்புகிறது. இது தொடர்பாக கலாமிடம் பா.ஜ.,தலைவர் அத்வானி பேசினார். தொடர்ந்து கலாம் இதற்கு உடன்படவி்ல்லை. போட்டியிட தமக்கு மனசாட்சி அனுமதி அளிக்கவில்லை என கூறியதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் கலாம் கூறுகையில்; என் மீது நம்பிக்கைக்கு மக்களுக்கும், மம்தாவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. என்றார். இவ்வாறு கலாம் வெளிப்படையாக அறிவித்து விட்டதால் ஜனாதிபதி தேர்தலில் இவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.
மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் : காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவர் என்ற பேச்சு எழுந்தபோது பிரணாப் முகர்ஜிக்கு தி,மு.க., முழு ஆதரவு அளிக்கும் என முன்கூட்டியே தெரிவித்திருந்தது. ஆனால் சொந்த மாநிலத்துக்காரரான, அப்துல்கலாமை தி.மு.க., மறந்து விட்டது. இதில் மாறுபட்டு மேற்குவங்க மாநிலத்துக்காரரான பிரணாப்பை இம்மாநில முதல்வரான மம்தாபானர்ஜி கடுமையாக எதிர்த்தார். அப்துல்கலாமே எங்கள் வேட்பாளர் என ஓங்கி ஒலித்தார். காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி தர்மத்தை கூட அவர் பார்க்கவில்லை. இது போல காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத போதும் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பிரணாப்பை ஆதரிப்பதாக சோனியாவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.
தமிழக முதல்வர் ஜெ., மலை வாழ் குடியை சேர்ந்த பி.ஏ.,சங்மாவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு பா.ஜ., கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பிஜூஜனதா தளத்தை சேர்ந்த ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கும் ஆதரவு அளித்துள்ளார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் , கலாமுக்கு ஆதரவு அளிக்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் யாருக்கு ஆதரவு ? தமிழகத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்கள் அப்துல்கலாமுக்கு ஆதரவு இல்லை, பிரணாப் தான் தகுதியானவர் என சர்டிபிகேட் கொடுத்து விட்டது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது கருத்தில் அப்துல்கலாம் போட்டியிடக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லாதபோது போட்டியிட்டு தனது இமேஜை குறைக்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.
அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த்கெஜ்ரிவால், மனிஷாசிசோடியா ஆகியோர் பிரணாப் மீது முறைகேடு புகார் இருப்பதால் இவர் இந்த உயர் பதவிக்கு லாயக்கற்றவர் என வர்ணித்துள்ளது.
இந்து மதத்தின் முக்கிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அப்துல்கலாமுக்கு ஆதரவு அளித்துள்ளது . கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். இவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் நல்லது தான் ஆனால் இதனை நாங்கள் முடிவு செய்ய முடியாது. சட்டரீதியிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என மோகன்பகவத் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
கலாமுக்கு ஆதரவு திரட்ட மம்தா தீவிரம்: ஜனாதிபதி தேர்தல் குறித்து திரிணாமுல் காங். கட்சியின் கூட்டம் கோல்கட்டாவில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். ஜனாதிபதி வேட்பாளராக மூன்று பேரின் பெயர்களை மம்தா காங்.கிற்கு பரிந்துரைத்தார். இதில் காங்.கட்சிக்கு நிராகரித்தது. இதனால் விரக்தி அடைந்த மம்தா பேஸ் புக் வாயிலாக ஜனாதிபதியாக அப்துல்கலாமை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால் பேஸ் புக் வாயிலாக ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக, திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட்டம் கோல்கட்டாவில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை ஆதரிப்பதில் மம்தா தீவிரம் காட்டி வருகிறார். மற்ற கட்சியினரும் கலாமை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
-KRK NETWORK-