தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும், ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விலையில், ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சமாக, 125 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய விலைப் பட்டியலும் தயார் நிலையில் உள்ளதால், எந்த நேரமும் விலை உயர்த்தப்படலாம் என டாஸ்மாக் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து, "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. விற்பனை துவக்கப்பட்ட ஓர் ஆண்டில், 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.
21 ஆயிரம் கோடி இலக்கு: தமிழகம் முழுவதும் செயல்படும், 6,900க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூலம், 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, 2012 -13ம் நிதி ஆண்டில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கைப் பூர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஜூன் 14ம் தேதி முதல் பீர் விலையில், ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களான பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்வு பட்டியல் தயார்: அதற்கான விலைப் பட்டியலும் தயார் செய்யப்பட்டு, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மூலம் முதல்வரிடம் அனுமதியும் வாங்கப்பட்டு விட்டது. இதனால், இன்று முதல் ஜூலை11ம் தேதிக்குள் எந்நேரமும் புதிய விலை பட்டியல்படி சரக்குகளின் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய விலைப் பட்டியலின் படி தற்போது, 65, 75, 85, 95 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் அனைத்து குவார்ட்டர் பாட்டில்களின் (180 மி.லி.,) விலையும் இனி, 70, 80, 90, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். "ஆப்' பாட்டில்களின் (375 மி.லி.,) விலையில், ஐந்து ரூபாயில் முடியும் அனைத்து சரக்குகளின் விலையில், 15 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 10 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. இதே போல், "புல்' பாட்டில்களின் (750 மி.லி.,) விலையைப் பொறுத்தவரை, ஐந்து ரூபாயில் முடியும் சரக்குகளின் விலையில், 25 ரூபாயும், பிற சரக்குகளின் விலையில், 20 ரூபாயும் உயர்வு செய்யப்படுகிறது. உயர்ரக மதுபானங்களான, "ஸ்காட்ச்' சரக்குகளின் விலையில், 45 ரூபாய் முதல், 125 ரூபாய் வரையில் உயர்வு செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் சில்லரை தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி விற்பனையாளர்கள் ஐந்து ரூபாய் விலையை உயர்த்தி விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், இனி அனைத்து சரக்குகளின் விலையும் இரட்டை இலக்கம், அதாவது 70, 80, 90 ரூபாயில் முடியும் வகையில் விலைப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சரக்கு விலையில் அவற்றின் பழைய விலையில் இருந்து குறைந்த பட்சம், ஐந்து ரூபாய் முதல் அதிகபட்சமாக, 125 ரூபாய் வரையில், அளவைப் பொறுத்து உயர்வு செய்யப்பட்டுள்ளது.
எப்போதும் வெளியாகலாம்...: இது குறித்து பேசிய, "டாஸ்மாக்' அதிகாரி ஒருவர், ""பொதுவாக டாஸ்மாக் கடைகளில் சரக்கு விலையில் உயர்வு என்பது ஜூலை11ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் பீர் விலை ஜூன்14ம் தேதி முதல் உயர்த்தப்பட்டு விட்டது. அதை அடுத்து, பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் சரக்குகளின் விலையை உயர்த்துவதற்கான ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டு விட்டது. புதிய விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. விலை உயர்வு இன்று முதல் ஜூலை11ம் தேதிக்குள் எந்நேரமும் வெளியாகலாம்,'' என்றார்.