மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலக கட்டடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதல்வர், முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ள, இந்த கட்டடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், உயிர் பலி நிகழ்ந்ததாக தகவல் இல்லை. எனினும், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் ஆவணங்கள் சாம்பலாகி இருக்கலாம் என, நம்பப்படுகிறது. தீ விபத்திற்கு சதி காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், மந்திராலயா என்ற பெயரிலான அடுக்கு மாடி கட்டடத்தில், அரசு தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் ஆறாவது மாடியில், முதல்வர் பிருதிவிராஜ் சவான் அலுவலகம் உள்ளது. இதே கட்டடத்தின் நான்காவது மாடியில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பாபன்ராவ் பச்புட்டேவின் அலுவலகம் உள்ளது. இதுதவிர, வேறு முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களும் இந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.
25 வண்டிகள்: இக்கட்டடத்தில், நான்காவது மாடியில் உள்ள அமைச்சர் பாபன்ராவ் பச்புட்டே அலுவலகம் அருகே, நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, தீ வேகமாக பரவியது. முதல்வர் அறையுள்ள ஆறாவது தளம் மற்றும் பல தளங்களுக்கும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், நகரின் பல பகுதிகளில் இருந்து 25 தீயணைப்பு வண்டிகளில், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
புகை மண்டலம்: அதுமட்டுமின்றி, கமாண்டோ படையினரும், மும்பை போலீசின் விரைவு அதிரடி படையினரும், கடற்படையைச் சேர்ந்தவர்களும் விரைந்து வந்து, தீ பிடித்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பிடித்த அடுத்த 20 நிமிடத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைமைச் செயலக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். "ஹைடிராலிக்' ஏணிகள் மூலம், தீ பிடித்த பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டனர். தீ பெரிய அளவில் எரிந்ததாலும், அதனால், பெரும் புகை மண்டலம் உருவானதாலும், பலர், கட்டடத்தின் கைப்பிடிச்சுவர் மற்றும் பால்கனிகளில் வந்து நின்று கொண்டனர். தீயணைப்பு படையினர் தங்களை காப்பாற்ற வேண்டும் என, குரல் கொடுத்தனர். பலர் கயிறுகள் உதவியுடனும், கழிவுநீர் குழாய்கள் மூலமும் கீழே இறங்கினர். பெரும்பாலானவர்கள் தீயணைப்பு படையினரின் ஏணிகள் மூலம் மீட்கப்பட்டனர்.
பெருத்த சேதம்: மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழலால் சர்ச்சைக்கு உள்ளான நகர்ப்புற மேம்பாட்டு துறை, உள்துறை, வருவாய் மற்றும் தொழில்துறை போன்றவை செயல்பட்டு வந்த அலுவலகங்கள், தீ விபத்தில் பெருத்த சேதம் அடைந்ததாக நம்பப்படுகிறது. அதனால், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் தொடர்பான ஆவணங்கள், சாம்பலாகி இருக்கலாம் என, நம்பப்படுகிறது. ஆறாவது மாடியில் உள்ள முதல்வர் பிருதிவிராஜ் சவான் அலுவலகமும், துணை முதல்வர் அஜித்பவார் அலுவலகமும் தீ விபத்தில் சேதம் அடைந்தன. தீ விபத்தில் சிலர் காயமடைந்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினாலும், அதிகாரப்பூர்வமாக அதை யாரும் உறுதி செய்யவில்லை.
பதில் அளிக்க மறுப்பு: மும்பை போலீஸ் கமிஷனர் சம்பவம் பற்றி கூறுகையில், ""தலைமைச் செயலக கட்டடத்தின் பின்பகுதி பெருத்த சேதம் அடைந்துள்ளது. யாரும் காயம் அடைந்துள்ளனரா என்பது உறுதி செய்யப்படவில்லை. காற்றின் வேகத்தில் பரவி வரும் தீயை அணைக்க, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார். ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் தொடர்பான ஆவணங்கள் அழிந்து விட்டனவா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். தீயை அணைக்கும் பணியில், கடற்படையினரும், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஈடுபட்டனர். அவர்கள் கட்டடத்தில் மாடியில் இருந்தவர்களை, மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். ""ஹெலிகாப்டரில் நாங்கள் சென்று பார்த்த போது, மொட்டை மாடியில் யாரும் இல்லை. "கட்டடத்திற்குள் சிக்கிக் கொண்டவர்கள் உடனே மேலே வரவேண்டும்' என, அறிவிப்பு செய்தோம். ஹெலிகாப்டரில் இருந்து கயிறு போடப்படும் என்றும் கூறினோம்,'' என, கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் "மந்திராலயா': மகாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ளது, அம்மாநில தலைமைச் செயலகம் "மந்திராலயா.' இது இதற்கு முன், "சச்சிவ்வாலயா' என்று அழைக்கப்பட்டது. "சச்சிவ்' என்றால் செயலகம், "வாலயா' என்றால், சபை என்று பொருள். 1980ல் இப்பெயர் மாற்றப்பட்டு, "மந்திராலயா' என பெயரிடப்பட்டது. 1955ம் ஆண்டு இது கட்டப்பட்டது. இது, ஆறு மாடிக் கட்டடம். அனைத்து துறைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரின் அறைகள் இக்கட்டடத்தின் ஆறாவது மாடியில் உள்ளன. அரசு துறைகளும், ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், 13 மாடிகள் கொண்ட புதிய தலைமைச் செயலகம், இக்கட்டடத்துக்கு எதிரே கட்டப்பட்டுள்ளது.
வெடிச் சத்தம்: மகாராஷ்டிரா பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பாபன்ராவ் பச்புட்டே கூறுகையில், ""தீ விபத்து நிகழ்ந்ததும், வெடிச் சத்தம் ஒன்று கேட்டது. எனது அமைச்சக ஊழியர்கள், தீயணைப்பு கருவியை பயன்படுத்தி, தீயை அணைக்க முற்பட்டும் முடியவில்லை. அது வேகமாக பரவியது. உடன் நான் கீழே இறங்கி ஓடியதோடு, மூன்றாவது தளத்தில் இருந்த அமைச்சர் ஜெயந்த் பாட்டீலையும் கீழே அழைத்துச் சென்றேன். தீ பிடிக்கத் துவங்கி, 20 நிமிடம் கழிந்த பின்னரே, தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,'' என்றார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் மதுக்கர் சவான் கூறுகையில், ""நான் தப்பிப்பதற்காக வெளியே ஓடி வந்த போது, "ஏசி' மெஷின்கள் பல வெடித்துச் சிதறின,'' என்றார். -krk network-dinathagaval-