புதுக்கோட்டை இடைத் தேர்தல் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று அமாவாசையாக இருப்பதால், அ.தி.மு.க., தரப்பில் அதிகமாக யூகங்கள் கிளம்பியுள்ளன. இதனால், கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவு ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றிபெறவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க.,வின் பெயரைக் குறிப்பிடாமல், இத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இத்தேர்தலில் 30,500 ஓட்டுக்களை பெற்று டெபாசிட்டையும் தே.மு.தி.க., வேட்பாளர் தக்கவைத்துள்ளார். இது அ.தி.மு.க., தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சந்தேகம்: இடைத்தேர்தலிலேயே கட்சித் தலைமை சொன்னதை நிறைவேற்ற முடியாத அமைச்சர்களால், லோக் சபா தேர்தலில் சாதிக்க முடியுமா என்ற சந்தேகத்தையும் இது எழுப்பியுள்ளது. மூன்று பூத்களில் அ.தி.மு.க.,வை வீழத்தி தே.மு.தி.க., வெற்றிபெற்றதே இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுமட்டுமின்றி, சில அமைச்சர்கள், கட்சிப் பணியைக் காட்டிலும், வருவாய் ஈட்டுவதிலேயே குறியாகவுள்ளனர். குறிப்பாக, டாஸ்மாக் குடிமையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பினாமிகள் மூலம் அவர்கள் சாம்ராஜ்ஜியம் தான் நடக்கிறது. இவர்களால், மற்ற கட்சியினர் மட்டுமின்றி ஆளும்கட்சியினரும் வருவாய் இழந்துள்ளனர். கட்சிக்காகக் கடுமையாக உழைத்தும் பலனில்லாததால், அவர்கள் சோர்ந்து போயுள்ளனர்.
குழப்பம்: நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளார். ஒரு சில அமைச்சர்கள் மீது, கட்சியினர் புகார்களைத் தெரிவித்துள்ளனர். கோஷ்டி மோதல்களால் மாவட்டங்களில் கட்சிக்குள் குழப்பங்கள் நிலவுகிறது. முதல்வரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சில அமைச்சர்கள் திணறுகின்றனர். இதை ஆராய்ந்து அறிந்த கட்சித் தலைமை, அமைச்சர்கள் சிலரை கழற்றிவிட்டால் மட்டுமே, ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக நடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.
அமாவாசை: இன்று அமாவாசை என்பதால், அமைச்சரவை மாற்றம் கண்டிப்பாக இருக்கும் என்ற தகவல் அமைச்சர்கள் மட்டுமின்றி அ.தி.மு.க., அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் பரவியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா அமாவாசை தினத்தன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு முன் நடந்த சம்பவங்களை அ.தி.மு.க.,வினர் நினைவு கூர்கின்றனர். "மறைந்த மூப்பனார் தலைமையிலான த.மா.கா., உடன் தேர்தல் கூட்டணி உடன்பாட்டை அமாவாசை தினத்தன்று தான் இறுதி செய்தார். அதேபோல், வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் அமாவாசை தினத்தைத் தான் தேர்வு செய்தார். அ.தி.மு.க., வேட்பாளர்களை அமாவாசை தினத்தன்று வேட்புமனு தாக்கல் செய்யப் பணித்தது என பழைய நிகழ்வுகளை அசைபோட்டபடி பலரும், இன்று அமைச்சரவை மாற்றம் வராதா என காத்திருக்கின்றனர். முதல்வர் எந்த மாதிரியான அதிரடியை கையாளப்போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல், அமைச்சர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பலரது வயிற்றில் புளி கரைக்கவும் துவங்கியுள்ளது. முன்பு மன்னார்குடி கும்பல் மூலம் பலர் காரியம் சாதித்தனர். முதல்வர் ஜெ.,வின் அதிரடியால், அந்தக் குடும்பத்தின் ஆதிக்கம் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், யாரைப் பிடித்து பதவியைத் தக்கவைப்பது என்று தெரியாமல் பலர் குழம்பிப் போயுள்ளனர். -KRK NETWORK-