ஐஓசி, ஹச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் ஆகிய நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களை முறைகேடாக விற்பனை செய்ததால் அரசுக்கு ரூ.43,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பம் ஒன்றிற்கு சராசரியாக 6 சிலிண்டர்களை மட்டுமே எல்பிஜி நிறுவனம் ஒதுக்கி உள்ளது. ஆனால் எல்பிஜி.,யின் புள்ளி விபர அறிக்கையின்படி இந்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ஆகியோருக்கு முறைகேடாக எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த உண்மை நிலையை வாடிக்கையாளர்களுக்கு தெரியபடுத்துவதற்காக இந்த புதிய தகவல் அறிக்கையை பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விஐபி.,களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ள சிலிண்டர்கள் குறித்த விபரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரம்: கடந்த ஓராண்டில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு ரூ.31,318 மதிப்பிலான 91 சிலிண்டர்களும், பஞ்சாப் முன்னாள் டிஜிபி கே.பி.எஸ்.கில்லுக்கு ரூ.27,189 மதிப்பிலான 79 சிலிண்டர்களும், மாநிலங்களுக்கான விவகாரத்துறை அமைச்சர் பிரனீத் கவுருக்கு ரூ.26,501 மதிப்பிலான 77 சிலிண்டர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா திகார் சிறையில் இருந்த போது அவரது வீட்டிற்கு 60 சிலிண்டர்களும், முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வீட்டிற்கு 60 சிலிண்டர்களும், தொழில்துறை அமைச்சர் பிரபுல் பட்டேலுக்கு 41 சிலிண்டர்களும், என்சிபி தலைவர் சரத் பவார் வீட்டிற்கு 31 சிலிண்டர்களும், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கு 34 சிலிண்டர்களும், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு 35 சிலிண்டர்களும், வெங்கைய்ய நாயுடுவிற்கு 33 சிலிண்டர்களும் ரான்பாக்சி நிறுவனர் பாய் மோகன் சிங்கிற்கு 52 சிலிண்டர்களும், பார்தி குழும தலைவர் சுனில் மிட்டல் மற்றும் அவரது மகன் கவின் வீட்டிற்கு 27 சிலிண்டர்களும் சப்ளை செய்யப்பட்டுள்ளன.