சென்னை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட பந்தியில், கூடுதலாக "குலோப்ஜாமுன்' கேட்டதில் வாய் தகராறு ஏற்பட்டு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நின்றது.
பெரம்பூர் அருகே செம்பியம், சிறுவள்ளூர் ரோட்டில் உள்ளது யுனைடெட் காலனி திருமண மண்டபம். இங்கு நேற்று திருமணம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர் மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு, விருந்து பரிமாறும் பந்திக்கு சென்றார். விருந்து பொறுப்பு ஒப்பந்த முறையில் விடப்பட்டிருந்தது.
"குலோப்ஜாமுன்' கலாட்டா: அங்கு பரிமாறப்பட்ட இலையில், "குலோப்ஜாமுன்' வைக்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர், மேலும் ஒரு "குலோப்ஜாமுன்' வேண்டும் என்று கேட்டார். மேலும், ஒன்று வைக்கப்பட்டது. மீண்டும் ஒன்று கேட்டார். ஆனால், பந்தி பரிமாறிய உலகநாதன், இதற்கு மேல் வைத்தால் கட்டுபடியாகாது எனத் தெரிவித்தார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.
உணவு பாழ்: சிறிது நேரம் கழித்து, திருமண மண்டபத்தில் பந்தி பரிமாறும் அறையில் புகுந்த சிலர், அங்கிருந்த பொருட்களையும், உணவுப் பொருட்களையும் சூறையாடினர். இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. வரவேற்புக்காக செய்யப்பட்ட விருந்து உணவுகள் அனைத்தும் பாழானது. செம்பியம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். தாக்குதல் தொடர்பாக, திருமண வீட்டாரிடமிருந்து புகார் பெறப்பட்டது. பந்தி பிரச்னையால் திருமணம் நிற்கக்கூடாது என்று போலீசார் அறிவுரை கூறினர். இதனால் நேற்று காலை திருமணம் தடையின்றி நடந்து முடிந்தது. தொடர்ந்து மதியம் காவல் நிலையத்திற்கு சென்ற இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். தன்னை தாக்கி, பொருட்களை அபகரித்த உலகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதிரேசன் கோரியுள்ளார். செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.