புதுச்சேரியில் மின் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம், இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மின்சார பங்கீட்டை முறைப்படுத்தி வினியோகிப்பதற்கும், உரிய விலையில் வழங்குவதற்கும், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்தாண்டு செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 23ம் தேதியில் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்தது. அதில், 2011 - 12 மற்றும் 2012 - 13ம் நிதியாண்டுகளுக்கான நிகர வருவாய் தேவை, மின் கட்டணம் குறித்து, குறிப்பிடப்பட்டிருந்தது. புதுச்சேரி அரசின் விண்ணப்பத்தை ஆய்வு செய்த ஆணையம், 2012 - 13ம் ஆண்டுக்கான மின் கட்டண நிர்ணய ஆணையை, கடந்த 12ம் தேதி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் அனைத்து வகை மின் நுகர்வோர்களுக்கான மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு, கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வீட்டுபயோகத்திற்கான மின் கட்டணம், ஏற்கெனவே ஒரு யூனிட்டுக்கு (100 யூனிட் வரை) 60 பைசாவாக இருந்தது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ஏற்கெனவே 90 பைசாவாக இருந்த கட்டணம் தற்போது 95 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 201 முதல் 300 யூனிட் வரை ஏற்கெனவே ஒரு ரூபாய் 65 பைசாவாக இருந்தது. இது, தற்போது ஒரு ரூபாய் 80 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஏற்கெனவே 2 ரூபாயாக இருந்த கட்டணம், ரூ.2.35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து வகையான மின் நுகர்வோருக்கும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு குறித்து மின்துறை உயரதிகாரி கூறுகையில், "வீட்டு உபயோக மின் நுகர்வில் சாதாரண மக்கள் மீது பளு ஏற்றாத வகையில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது' என்றார். -KRK NETWORK-