புதுடில்லி:""ராஜ்யசபாவில் சத்தமிட்டு பேச வேண்டிய அவசியம் இருக்காது. அடக்கமாக பேசி காரியம் சாதிப்பேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவரது சாதனைகளுக்கு அங்கீகாரமாக ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். பொதுவாக பார்லிமென்ட் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி, பிரச்னை கிளப்புவர். ஆனால், சச்சினை பொறுத்தவரை அமைதியாக பேசி மிகவும் நாகரிகமாக நடந்து கொள்ள விரும்புகிறார்.
இது குறித்து சச்சின் கூறியது:
ராஜ்யசபாவில் நான் சத்தமிட்டு கோஷம் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். என்னை யாரும் சத்தமாக பேச வைக்க மாட்டார்கள். எதற்காக கத்த வேண்டும்? சொல்ல வேண்டிய விஷயத்தை அடக்கமாக சொல்லலாம். அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துகள். இவர்கள் சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பதக்கம் வெல்ல தவறினாலும் கூட, அவர்களது முயற்சிகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.
பகலிரவு டெஸ்ட் போட்டியை உடனடியாக சர்வதேச அளவில் அமல்படுத்தக் கூடாது. முதல் தர போட்டிகளில் சோதனை ரீதியாக அமல்படுத்தி, வீரர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.