சென்னை: "புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், 30 ஆயிரத்து 500 ஓட்டுக்களை பெற்று, முகிலைக் கிழித்து வரும் முழுநிலவாக தே.மு.தி.க., காட்சி அளிக்கிறது' என, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஒரு வித்தியாசமான நிலைமை உருவாகி வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அராஜகத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் அளவு கடந்து இடைத்தேர்தலில் கையாளுவது வாடிக்கையாகி விட்டது. அதன் விளைவாக, இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டியிடத் தயங்குகின்றன. புதுக்கோட்டை இடைத்தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கோலோச்சி வந்த அமைச்சரவையே கடந்த ஒரு மாதமாக புதுக்கோட்டைக்கு மாறி விட்டது. அரசின் நலத்திட்டங்கள் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. பண பலம், படை பலம், அதிகார பலம் என ஆளுங்கட்சியினர் பயன்படுத்தினர். தே.மு.தி.க., 30 ஆயிரத்து 500 ஓட்டுக்கள் (21.3 சதவீதம்) பெற்று, சரியான பாடம் புகட்டியுள்ளது. தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தது தான். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், 30 ஆயிரத்து 500 ஓட்டுக்கள் பெற்று, தே.மு.தி.க., முகிலைக் கிழித்து வரும் முழுநிலவாக காட்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். -KRK NETWORK-






