ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்காக, முதல்வர் ஜெயலலிதாவை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி சந்தித்து பேசியது, தேசிய அரசியலில் திருப்புமுனை உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பெறுவதற்கான அச்சாரமாக இந்த சந்திப்பு அமைய வாய்ப்புள்ளது.
பரபரப்பான சந்திப்புகள்: ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளர்களை முடிவு செய்வதில், அரசியல் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட சந்திப்புகள் குழப்பங்களையும், யூகங்களையும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் தலைவி சோனியாவை சந்தித்த மம்தா பானர்ஜி, அடுத்ததாய் முலாயம் சிங்கை சந்தித்து பேசியதோடு, அப்துல் கலாம் வேட்பாளர் என்று அறிவித்து ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மாவை வேட்பாளராக முன்னிறுத்திய அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, அவருக்கு ஆதரவாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் குரல் கொடுக்க வைத்தார். இந்த நிலையில், அணு உலைகள் பாதுகாப்பு தொடர்பாக, ஆய்வு நடத்த, பார்லிமென்ட் நிலைக் குழுவின் சார்பில், சென்னை வந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஜெயலலிதாவைச் சந்தித்து பேசினார்.
கூட்டணிக்கு அச்சாரம்: இதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பெரிய திருப்பம் ஏதும் ஏற்படவில்லை யென்றாலும், இந்த சந்திப்பு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்துள்ளது என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், நீங்கள் இணைய வேண்டும்' என அத்வானி வேண்டுகோள் விடுத்ததாகவும், "உரிய நேரத்தில் முடிவை எடுப்பேன்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மாற்றத்திற்கு காரணம்: "தேசிய அரசியலில் காங்கிரஸ், பா.ஜ., விற்கு மாற்றாக தாங்கள் வளர வேண்டும் என்பது அ.தி.மு.க.,வின் எண்ணமாக இருக்கிறது. காங்கிரசுடனான உறவிற்கான கதவு முழுமையாக அடைபட்டிருக்கும் நிலையில், பா.ஜ.,வின் தோழமையை முழுமையாக புறக்கணிக்கவும் ஜெயலலிதா விரும்பவில்லை. அதன் காரணமாகவே, அத்வானியுடனான சந்திப்பை ஏற்படுத்தி, தேசிய அரசியலில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் அவரின் செயல்பாடு அமைந்திருந்தது' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஜனாதிபதி வேட்பாளராக ஏற்கனவே சங்மாவை அறிவித்ததோடு, அது குறித்து அத்வானிக்கும் தகவல் தெரிவித்தார் ஜெயலலிதா. இதையடுத்து, அத்வானியை சந்தித்து சங்மா ஆதரவு கேட்ட நிகழ்வும் நடந்தது. இதற்கு பிறகும், மாற்று வேட்பாளர் குறித்து அத்வானியுடன் பேசுவதற்கு ஜெயலலிதா ஒப்புக் கொண்டது பா.ஜ.,வுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற அவரது மன நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. "ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க.,வுடன் ஒருங்கிணைந்து முடிவுகளை எடுப்போம்' என்ற அத்வானியின் பேட்டியும், இரு கட்சிகளிடையே உள்ள இணக்கமான சூழலையே பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட, இந்த சந்திப்பு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்புக்கான விடை அடுத்து வரும் நாட்களில் நடக்கும் அரசியல் திருப்பங்கள் மூலம் தெரிய வரும். -KRK NETWORK-






