"நான், ஜனாதிபதி வேட்பாளர் என்பதை, பேப்பரில் தான் பார்க்கிறேன்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு, காந்திய சிந்தனைகளை ஊட்டும் வகையில், "உலக காந்தி அமைப்பு' சார்பில், காந்தி புகைப்படங்கள், அஞ்சல் தலைகள், அவரது உருவம் பொறித்த நாணயங்கள் உள்ளிட்டவை அடங்கிய கண்காட்சி, அண்ணா பல்கலையில் இன்று நடந்தது. இதனை, முன்னாள் ஜனாதிபதி கலாம் துவக்கி வைத்தார்.
கலாம் பேசும்போது, ""உலகத்தில், 170 நாடுகளில் காந்தியின் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. 70 நாடுகளில், அவரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. காந்தியின் வரலாறு, வாழ்க்கையை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. காந்திக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது, அவரது தாயார், "வாழ்க்கையில், யாராவது கடுந்துன்பத்தில் இருக்கும்போது, அவரை மாற்றி, அவர் வாழ்க்கையில் முன்னேறப் பாடுபட வேண்டும். அப்படிச் செய்தால், கடவுள் உனக்கு அருள் புரிவார்' என கூறினார். இதை, நீங்களும் கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.
கலாம் புறப்படும்போது, "ஜனாதிபதி தேர்தலில், உங்களது பெயரும் அடிபடுகிறதே' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ""உங்களைப்போல் நானும், எனது பெயர் பேப்பரில் வருவதைப் பார்க்கிறேன்; அவ்வளவு தான்!'' என்றார். நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-KRK NETWORK-





