உங்கள் ஊர் பிரச்சனைகள், பொது செய்திகள், புகைப்படங்கள், கவிதைகள், தகவல்கள், பிறந்த நாள் வாழ்த்து புகைப்படம், விளம்பரம்... அனைத்தும் இலவசம்... இது உங்கள் செய்தி... தின தகவல்.... இது நமது பக்கம்.... e-mail: krkinvites@gmail.com, facebook: krk pondicherry contact: 8148271466

12 June 2012

ஜூலை 19ல் ஜனாதிபதி தேர்தல்


புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் இன்று முறைப்படி அறிவித்தார். அடுத்த மாதம் 19ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.


நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதி முடிவடைவதை ஒட்டி, புதிய ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் வெளியிட்டார்.இதன்படி, அடுத்த மாதம் 19ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடைபெறும்.தொடர்ந்து, 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு வெளியாகும்.இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 16ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.


தேர்தல் நடவடிக்கைகள் குறித்து மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதாவது:நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருப்பவரைத் தேர்ந்தெடுக்க ஜூலை மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 16ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை மாதம் 4ம் தேதி.ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டுகளின் மதிப்பு 10,98, 882. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் உள்ள 776 எம்.பி.,க்கள் மூலமாக, 5,49,408 மற்றும் நாட்டில் டில்லி மற்றும் புதுச்சேரி உட்பட அனைத்து மாநில சட்டசபைகளில் உள்ள 4120 எம்.எல்.ஏ.க்கள் மூலமாக 5,49,474 ஓட்டுகளும் அடங்கும்.இந்த தேர்தலில், நியமன உறுப்பினர்களாக பதவியேற்றுள்ள எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட இயலாது. தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் பயன்படுத்தாமல், ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.


ராஜ்யசபா செயலர் ஜெனரல், தேர்தல் அதிகாரியாகச் செயல்படுவார். அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் உதவித் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேரிலோ அல்லது தங்களை அறிமுகப்படுத்துவோர் மூலமாகவோ டில்லியிலுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பத்தை அளிக்கலாம்.ஒவ்வொரு வேட்பு மனுவுடன் குறைந்தது 50 உறுப்பினர்கள் (எம்.பி., எம்.எல்.ஏ.,) முன்மொழிந்து இருக்க வேண்டும். ஒரு உறுப்பினர் ஒரு வேட்பு மனுவை மட்டுமே பரிந்துரைக்க முடியும்.லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் டில்லி பார்லிமென்ட் வளாகத்திலும், எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநில சட்டசபை வளாகத்திலும் ஓட்டளிக்க வேண்டும்.நாட்டின் மிக உயர்ந்த பதவிக்காக நடைபெறும் இத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். தேர்தல் பார்வையாளர்களாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்தார்.  -KRK NETWORK-

Related Posts Plugin for WordPress, Blogger...
*இங்கு தொகுக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் என்னுடைய சொந்த படைப்புகள் மற்றும் கருத்துகள் இல்லை. இவை அனைத்தும் இணைய தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை
*This site does not store any files on its server. we only index and link to content provided by other sites.

SHARE YOUR COMMENT