ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராம காட்டுப்பகுதியில் நேற்று ஒரு பெண் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அந்த பெண் பெயர் ராஜம் (65) என்றும், திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி என்பதும் தெரிய வந்தது. ராஜம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் ஜெயசீலன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகனும் 2 மகள்களும் வெளியூரில் வசிக்கிறார்கள். தனக்கு கிடைக்கும் பென்சன் மற்றும் மகன் அனுப்பும் பணத்தை வைத்து ராஜம் ஈக்காடு கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.
தாய் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்த மகன் ரோஜன் டேனியல் ஈக்காடு சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அதே தெருவில் உள்ள பாஸ்கர் என்பவர் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது. ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதுபற்றி போலீசில் அவர் தகவல் தெரிவித்தார். போலீசார் பாஸ்கர் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் ரத்தம் உறைந்து இருந்தது. இதன் மூலம் பாஸ்கர்தான் கொலையாளி என போலீசார் முடிவு செய்தனர்.
தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டனர். கிராமத்தின் வயல் வெளியில் பதுங்கி இருந்த பாஸ்கர் (31), அவரது மனைவி சரிதா (28), சரிதாவின் தம்பி மகன் பார்த்திபன் (13) ஆகியோர் பிடிபட்டனர். பாஸ்கரன் தனியார் கம்பெனியில் மோட்டார் மெக்கானிக்காக உள்ளார். அவரது வீட்டில் பார்த்திபன் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
நகைக்காக ராஜத்தை கொலை செய்ததாக பாஸ்கர் கூறினார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
எனது மருமகன் பார்த்திபன் கம்ப்யூட்டர் கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டவன். கம்ப்யூட்டர் கேம் வாங்குவதற்காக என் மனைவியிடம் பணம் கேட்டான். அதற்கு அவள் என்னிடம் அவ்வளவு பணம் ஏது என்றாள். உடனே அவன் பாட்டி ராஜத்திடம் நிறைய நகை அணிந்து இருக்கிறாள். அவளை அடித்து கொன்று நகையை பறித்தால் யாரும் கேட்க போவதில்லை என்று யோசனை கூறினான். நகையை பறிப்பதற்காக ராஜத்தை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
மாம்பழம் வாங்கி வந்துள்ளேன். சாப்பிட வாருங்கள் என்று கூறி அவரை வீட்டுக்கு வரவழைத்தான். ராஜம் வந்ததும் கதவை சாத்தினோம். துப்பட்டாவில் அவரது கழுத்தை நெரித்தோம். பார்த்திபன் கிரைண்டர் குழவியால் தலையில் அடித்தான். இதில் அவர் அதே இடத்தில் பிணமானார். அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டோம். பிணத்தை ஒரு கோணிப்பையில் கட்டினோம். இரவு நேரத்தில் அந்த கோணிப்பையை ஸ்கூட்டியில் ஏற்றி செங்காடு கிராமத்துக்கு கொண்டு சென்றோம். நான் ஸ்கூட்டியை ஓட்ட பின்னால் பார்த்திபன் பிணம் இருந்த கோணிப்பையை வைத்து இருந்தான்.
ஒதுக்குப்புறமான இடத்தில் கோணிப்பையை வீசி அதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தோம். பின்னர் தலை மறைவாகிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர்களிடம் இருந்து ராஜத்தின் 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கஜேந்திரகுமார், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு மனோகரன் பாராட்டினார். -KRK NETWORK-






